பக்கம்:பொன் விலங்கு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பொன் விலங்கு

வரும். அப்போது தெரிந்து கொள்வீர்கள். இப்போது நீங்கள் புறப்படலாம்' என்று புன்முறுவலோடு அவன் பதில் சொல்ல இடமின்றிப் பேச்சை முடித்தார் பூபதி.

முக்கால் மணி நேரத்துக்குமேல் கல்லூரி நிர்வாகியின் அறையில் உட்கார்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்து விட்டு அவன் வெளியே வந்து ஆசிரியர்கள் அறைக்குள் திரும்பி நுழைந்தபோது மற்றவர்கள் அவனைப் பார்த்த பார்வையே 'ஒருமாதிரி இருந்தது. "என்ன விசேஷமோ? ரொம்ப நாழிகைபேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறதே?' என்று விஷயத்தை அறிந்துகொண்டு வம்பளக்கும் ஆவலோடு அவனை அணுகிக் கேட்டார் ஒரு பேராசிரியர்.

"ஒன்றுமில்லை" என்று சுருக்கமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினான் சத்தியமூர்த்தி. காசிலிங்கனாரோ வேறு எதையோ நினைத்துக் கொண்டு பயந்தார். 'ஏதோ நமக்குள்ளே பேசிக்கொள்வதையெல்லாம் நீங்கள் மேலே இருக்கிறவர்களுக்குச் சொல்லி ரசாபாசம் பண்ணக்கூடாது. பிரின்ஸிபால் தமிழ்ப்பிரிவு ஆசிரியர்கள் தமிழ் தவிர வேறெதுவும் நடத்தக்கூடாது. ஆங்கிலத்தை ஆங்கில விரிவுரையாளர்கள் நடத்திக் கொள்ளுவார்கள் என்று கூறியதைப் பூபதி அவர்கள் காதில் போட வேண்டாம். இதெல்லாம் நமக்குள் ஓர் ஏற்பாடு. பிரின்ஸிபாலையும் பகைத்துக் கொள்ள முடியாது. மற்றவர்கள் நன்றாக ஆங்கிலம் நடத்திப் பேர் வாங்கிவிட்டால் அவருக்குப் பிடிக்காது. இதெல்லாம் பட்டும் படாமலும் இருக்கணும்' என்று காசிலிங்கனார் உடனே வலுவில் தன்னிடம் வந்து கூறியதைப் பார்த்தால் அவர் பேசியதெல்லாம் தான் பூபதியிடம் சொல்லியிருப்பதாக அவரே சந்தேகப்படுகிறார் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. 'படித்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இப்படி நினைக்கிறார்கள்? ஏன் இப்படிப் பொய்யாகப் பழகுகிறார்கள்?' என்று எண்ணி எண்ணித் தனக்குள் நொந்து கொள்வதைத் தவிரசத்தியமூர்த்தியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/268&oldid=595363" இலிருந்து மீள்விக்கப்பட்டது