பக்கம்:பொன் விலங்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

25

அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும்?"

"மன்னிக்க வேண்டும் என் முயற்சியையும் மீறி நடந்த தவறு இது. நான் வேண்டுமென்றே இப்படித் தாமதமாக வரவில்லை."

-பூபதி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தார். பின்பு அவருடைய கேள்விகள் வேறுவிதமாகத் திரும்பின. சத்தியமூர்த்தியின் கல்வித் திறனையும், தகுதிகளையும் அறிந்துகொள்ள முயலும் கேள்விகள் அவரிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிறந்தன. அவற்றில் சில கேள்விகள் அவனை ஆழம் பார்ப்பவையாகவும் இருந்தன.

"இதோ, என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே, எங்கள் கல்லூரியின் பிரின்ஸிபல் - இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் ஒருவிதமான பயமும் சந்தேகமும் உண்டு"-என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அந்தக் கேள்வி சத்தியமூர்த்தியின் முகத்தில் எந்த உணர்ச்சியைப் பரவ விடுகிறதென்று கவனித்தார் பூபதி.

சத்தியமூர்த்தியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. “பயத்துக்கும் சந்தேகத்துக்கும் உரியவர்களாயிருப்பதற்கு அப்படி நாங்கள் என்ன செய்கிறோம்?"

"ஒன்று மாணவர்கள் மனங்களை எல்லாம் முற்றிலும் உங்கள் வசமாக்கிக்கொண்டு நீங்கள் சொல்லியபடி ஆட்டிப்படைக்கிறீர்கள். இரண்டு, பிடிவாதமும் முரட்டுக் குணமும் உள்ளவர்களாயிருக்கிறீர்கள். மூன்று, உங்கள் மொழியைத் தவிர மற்ற மொழிகளை மதிக்க மறுக்கிறீர்கள். உண்டா இல்லையா..?"

"மாணவர்களை எங்கள் வசமாக்கிக்கொள்ள முடிவது எங்களது சாமர்த்தியம்தானே தவிரக் குற்றமாகாது. பிடிவாதமும், முரட்டுக்குணமும், மனிதர்களில் பலரிடம் உண்டு. அது எங்களிடம் மட்டுமே இருப்பதாகச் சொல்வதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஓர் ஆசிரியனுக்கு தான் எந்த மொழியைக் கற்பிக்கிறானோ அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/27&oldid=1405644" இலிருந்து மீள்விக்கப்பட்டது