பக்கம்:பொன் விலங்கு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பொன் விலங்கு

நாலைந்து நாட்களாகத் தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததைப் போலவே அன்றும் பலமான இடிகளோடும், மின்னலோடும் கோடைமழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த முன் மாலை நேரத்தில் மழைபெய்து நின்ற நிலையில் கோபுரங்களும் தானுமாக வார்த்தைகளால் இன்னதென வருணிக்கமுடியாததொரு பேரழகில் குளித்தெழுந்து ஈரம் புலராத பச்சை வனப்போடு இலங்குவதுபோல் தோன்றிக் கொண்டிருந்தது மதுரை நகரம், இசை வேளாளர்கள் நிறைந்த சங்கீத விநாயகர் கோயில் தெருவில் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஓர் இளம் பருவத்து நாதஸ்வரக் கலைஞர் இந்த உலகத்தின் சகலவிதமான அழகுகளையும் ஒலி வடிவமான ஒரே ஒர் இராகத்தில் சொல்லிவிட விரும்புவதுபோல் தோடியை வாசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வீட்டிலிருந்து தேர்ந்த விரல்கள் நல்ல வீணையின் நரம்புகளில் மிக மென்மையானதோர் இனிமையைப் பேசிக் கொண்டிருந்தன. தெருவைத் தழுவினாற்போல் நீண்டு செல்லும் மின்சார வயரிலும் தந்திக் கம்பிகளிலும் முத்து முத்தாக மழைநீர் நிற்கவும் மாட்டாமல், சிந்தவும் மாட்டாமல் மனிதனுடைய ஆசைகளைப் போல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. யாரும் வராத தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி அங்கு யாரோ வேண்டியவர்கள் வரப்போவது போல் கற்பித்துக் கொண்ட ஆர்வத்தோடு வீட்டு வாசலிலிருந்து கவனித்தவண்ணம் இருந்தாள் மோகினி.

அங்கிருந்து விடுபட்டு எங்கோ உடனடியாகப் பறந்து

போய்விடவேண்டும் போலத் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். உள்ளே அம்மாவும், கண்ணாயிரமும் கண்ணாயிரத்தோடு வந்திருந்த வேறொரு மனிதரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பும் அரட்டையுமாகக் கண்ணாயிரம் பேசிய விதத்தைப் பார்த்தால் இந்த உலகத்தையே தான் வம்பளப்பதற்கென்று சாசனம் செய்து கொடுத்துவிட்டது போல் பாவிப்பதாகத் தோன்றியது. அந்த நிலையில் உள்ளே உட்காருவதற்குப் பிடிக்காமல்தான் வாசலுக்கு எழுந்து வந்திருந்தாள் மோகினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/270&oldid=595369" இலிருந்து மீள்விக்கப்பட்டது