பக்கம்:பொன் விலங்கு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 277

அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். நீண்ட நாழிகை அழுத பின்பு அந்தக் காகிதத்தில் பென்சிலால் எழுதியதை ஒரு பழைய உறையில் இட்டு நன்றாக ஒட்டி மேலேயும் பென்சிலால் ஏதோ எழுதினாள்.

வரவு செலவு பணம் காசு எல்லாம் அம்மா கையில்தான். ஸ்டாம்புக்குக் காசு வேண்டும். விடிந்ததும் அம்மாவிடம் என்ன சொல்லி எப்படிக் காசு கேட்பது? ஸ்டாம்ப் ஒட்டின கடிதத்தைவிட ஸ்டாம்ப் ஒட்டாத கடிதம் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்று அவளுக்குத் தெரியும். விடியற்காலையில் மூன்றரை மணிக்குத் தெருக் கதவைத் திறந்து கொண்டு சந்தின் கோடியில் இருந்த பொதுத் தபால் பெட்டியில் அதைக் கொண்டு போய்ச்சேர்த்தபோதே அறுபது எழுபது மைலுக்கு அப்பால் இருக்கும் மலை நாட்டு நகரத்தில் தன்னுடைய தெய்வம் அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் படிப்பதுபோல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் மோகினி, மாணவ மாணவிகள் புடைசூழ அந்தத் தெய்வம் கல்லூரிக்குள் நடந்துபோவது போலவும், திரும்பி வருவது போலவும், தன்னுடைய தப்புத் தப்பாக எழுதிய பென்சில் எழுத்துக் கடிதத்தை வாங்குவது போலவும் கற்பனையில் நினைப்பதே சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு. அன்றைய வாழ்க்கையில் ஏதோ போதுமான பெரிய காரியத்தைச் செய்தது போன்ற திருப்தியை அடைந்திருந்தாள் அவள்.

காலையில் எழுந்ததும் அம்மா வேறு ஒரு செய்தியைச் சொன்னாள். 'கண்ணாயிரம் யாரோ பத்திரிகைக்காரங்களை கூட்டிக்கிட்டு வரேன்னிருக்காரு. உன் படத்தையும் போட்டு ஏதோ பேட்டியோ போட்டியோ- வெளியிடப் போறாங்களாம்.குளிச்சு நல்லா டிரஸ் பண்ணிக்கோ. பளிச்சிண்ணு தெரியறாப்பலே இரு. அழுது வடியாதே. படம், கிடம் பிடிச்சாலும் பிடிப்பாங்க."

இந்த வீட்டுக்கு யாரையாவது கூப்பிட்டுக்கொண்டு வருவதும் போவதும் வெற்றிலைப் பாக்குப் போடுவதுமாக வாழாவிட்டால் கண்ணாயிரத்துக்குத் தலை வெடித்துப் போய்விடுமோ? என்றெண்ணிக் குமுறுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்? - . . . .::. ... - . . . . . . . . . . . . . . . .”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/279&oldid=595387" இலிருந்து மீள்விக்கப்பட்டது