பக்கம்:பொன் விலங்கு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நா.பார்த்தசாரதி - 281

ஆட்படுகிறவைகளாகப் போய்விட்டதை எண்ணி வேதனைப்பட்டான். தன்னுடைய புத்தியின் குறும்புத்தனத்தையும் சிந்தனையின் துறுதுறுப்பையும் அடக்கிக்கொண்டு கலைமகளே குடியிருப்பது போன்ற அந்தச் சிறிய வீட்டை ஒவ்வொரு பகுதியாகக் கூர்ந்து நோக்கினான் குமரப்பன்.

'இந்த வீட்டில் இந்த அழகிய கூடத்தில் பாதசரங்களும், கொலுசுகளும் ஒலிக்க எத்தனை எத்தனை அழகிய பாதங்கள் தலைமுறை தலைமுறைகளாக நடந்திருக்கும்? எத்தனை எத்தனை குரல்களும் வாத்தியங்களும் ஒலித்திருக்கும் இந்த நான்கு சுவர்களும் தோன்றிய பிறகு, இவற்றுக்கிடையே எத்தனை பேருடைய ஆசைகளும், தாபங்களும், அநுதாபங்களும் தோன்றி அடங்கி யிருக்கும்? எவ்வளவு சிரிப்பொலிகள் கலகலத்திருக்கும்? எவ்வளவு அழுகுரல் விம்மி ஒலித்து வெடித்துத் தணிந்திருக்கும்?' என்றெல்லாம் எண்ணியபோது அவனுடைய இதயம் ஓயாமல் தவித்தது. ஏதோ ஒர் அதிகாரத்தை மீற முடியாமல் கட்டுப்பட்டு உட்கார்ந்திருப் பவளைப்போல் மோகினி அங்கு அடக்க ஒடுக்கமாக உட்கார்ந் திருந்தாள். பத்திரிகைக்காரர்கள் பேட்டி காண வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவளிடம் எந்தவிதமான உற்சாகமும், கிளர்ச்சியு மில்லை. சமூகத்தின் அநுபவத்துக்குப் பொதுவாயிருக்கிற கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவில் இருக்கிற மருந்து மரத்தைப் போன்றவர்கள். பயன்படுவது அதிகமாகவும், பயன் பெறுவது குறைவாகவும் வாழ வேண்டிய நியதிதான் அவர்களுக்குப் பெரும்பாலும் நியமிக்கப் பட்டிருக்கிறதென்று குமரப்பனுக்குத் தோன்றியது. ஏதோ ஒரு பதத்துக்கு அபிநயம் பிடிக்கச் சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்களைப் பிடித்துக் கொண்டபின் குமரப்பனைப் பொறுத்தவரையில் அங்கு வந்த காரியம் முடிந்துவிட்டது. குழந்தைக் குறுகுறுப்பும் தெய்வீகமானதோர் அமைதித் தன்மையும் நிறைந்த மோகினியின் முகத்தைப் பார்த்தபோது சித்திரா பெளர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் சத்தியமூர்த்தியும்தானுமாக அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் குமரப்பனுக்கு நினைவு வந்தன. மனிதனுடைய ஆசைகளும் சபலங்களும் நெருங்கிய அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/283&oldid=595397" இலிருந்து மீள்விக்கப்பட்டது