பக்கம்:பொன் விலங்கு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 285

ஒரு பெயரையும் முத்தழகம்மாளே உண்டாக்கியிருந்தாள். 'ரொம்பப் பொல்லாதவராயிருப்பார் போலிருக்கே என்று அந்தம்மாள் தன்னைப்பற்றிக் கூறியதைக் கேட்டுக் குமரப்பன் சும்மாயிருந்து விடவில்லை.

மனதில் உறைக்கும்படி நன்றாகப் பதில் கூறினான்: "நல்லவனாக இருப்பவனே தன்னை நல்லவன் என்று நிரூபித்துக் கொள்வது இந்தக் காலத்தில் ஒருவிதமான இலாபத்தையும் தராது அம்மா எல்லாவிதத்திலும் பொல்லாதவனாக வாழ்கிறவன் தன்னை நல்லவனாக நிரூபித்துக் கொண்டு காலம் தள்ளுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் இலாபகரமாக நடைபெறுகிற வியாபாரம். ஏதோ உண்மையைச் சொல்லலாமென்று வாயைத் திறந்தால் உடனே எனக்குப் பொல்லாதவனென்று பட்டம் கட்டுகிறீர்களே!"

"ஐயா! நீர் கொஞ்சம் சும்மா இருந்தால் நல்லது. உம்மோடு பேசறதுக்கே பயமாயிருக்கு" என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் முத்தழகம்மாள்.

"அப்படி நினைக்காதீர்கள் முத்தழகம்மாள் நம் குமரப்பனுடைய சுபாவமே இப்படித்தான். இவரிடம் எதிலும் ஒளிவு மறைவான பேச்சு இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவார். அவர் மட்டுமில்லை. இவருடைய நண்பர்கள், இவரோடு பழகுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான். சத்தியமூர்த்தியைத் தான் உங்களுக்குத் தெரியுமே? இரயிலில் உங்களுக்குப் பழக்கமாகி அப்புறம் உங்கள் பெண் பேனாவைக் கொடுப்பதற்காக அவனைத் தேடிக்கொண்டு போகணுமென்றாளே, அந்தப் பையன் கூடக் குமரப்பனுக்கு நெருங்கிய நண்பன்தான். அவனும் ஏறக்குறைய இவரைப் போலத்தான் பேசுவான் என்று கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்டு மோகினியின் முகம் மலர்ந்தது. குமரப்பன் அங்கே வந்ததிலிருந்து அவனை இதற்கு முன்பு எங்கே எப்போது பார்த்திருக்கிறோம் என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்த வளுக்கு இப்போது குழப்பம் நீங்கித் தெளிவு பிறந்துவிட்டது. சித்திரைப் பொருட்காட்சியில் தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/287&oldid=595405" இலிருந்து மீள்விக்கப்பட்டது