பக்கம்:பொன் விலங்கு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 291

பொறாமையையும் மல்லிகைப் பந்தல் கல்லூரியில் மாறி மாறிச் சந்திக்கத் தொடங்கியிருந்தான் அவன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பூபதி அவனை உதவி வார்டனாக நியமித்திருந்தார். மாணவர்களிடம் அளவற்ற பெருமதிப்பை அடைகிற ஆசிரியன், நிர்வாகிகளுடைய பகையைச் சம்பாதித்துக் கொள்ளுவதுமேதான் பெரும்பாலான கல்லூரிகளிலே வழக்கமாக இருக்கும். இரு சாராருடைய மதிப்பையும் பெறுகிற ஆசிரியனைப் பார்த்தால் எல்லாருக்கும் வியப்படையத்தான் தோன்றும். அதோடு பொறாமைப்படவும் தோன்றும். இதற்கு யாரும் எப்போதும் விதிவிலக்கு இல்லை.

கல்லூரி திறந்த இரண்டாவது வாரமோ, மூன்றாவது வாரமோ ஒரு நாள், பத்து மணிக்கு மேல் ஐந்து நிமிடம் தாமதமாகக் கல்லூரிக்குள் நுழைந்திருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வர் ஏதோ காரியமாக அல்லது ஒரு காரியமும் இல்லாமல் அறைவாயிலில் நின்று கொண்டிருந்தவர் அவன் உள்ளே தனியாக வருவதையும் பார்த்துக் கைக்கடிகாரத்தையும் பார்த்தார். இதையடுத்து அரைமணி நேரத்துக்கெல்லாம் கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட சுற்றறிக்கை ஒன்று எல்லா ஆசிரியர்களுக்கும் வந்தது, சில ஆசிரியர்கள் கல்லூரிக்குத் தாமதமாக வருவதையே ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதைத் தவிர்ப்பதற்காக இனிமேல் ஆசிரியர்கள் கையொப்பமிடும் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்துடன் அதற்குக் கீழே வந்த நேரமும் குறிப்பிட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கண்டிருந்தது.

ஐந்து நிமிடங்கள் தாமதமாகத் தன்னைப்பார்த்ததும் முகத்தில் கடுகடுப்போடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே அவர் அறைக்குள் நுழைந்ததையும் அதற்கடுத்த முப்பதாவது நிமிடத்தில் மேற்படி சுற்றறிக்கை வந்ததையும் பார்த்தபோது முதல்வர் தன்மேல் 'கரு' வைத்துக்கொண்டு பகைமை செலுத்தி வருகிறார் என்பதை சத்தியமூர்த்திக்கு நன்றாகப் புரிய வைத்தன. உதவி வார்டன் ஒருவர் அவசியமில்லை என்பதாகவும், அப்படியே அவசியமாக இருந்தாலும் புதிதாக வந்திருக்கிற ஒர் இளம் விரிவுரையாளரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/293&oldid=595419" இலிருந்து மீள்விக்கப்பட்டது