பக்கம்:பொன் விலங்கு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 293

ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள் என்பது சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். பட்டறையில் உலைக்களத்தில் சம்மட்டி அடிக்கிற சாதாரணத் தொழிலாளிகள் கூடத் தொழில் நிமித்தமாக ஏற்படும் சாதக பாதகங்களில் ஒன்றுபட்டுக் கூடி நிற்பார்கள். அதேசமயத்தில் படித்துப் பட்டம் பெற்று நாகரிகமாக உடையணிந்து நாகரிகமாகப் பேசித் திரிகிற புத்திமான்கள் அப்படி ஒன்றுபடாமல் ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் பேசுவதும், ஒருவருடைய வீழ்ச்சியில் மற்றொருவர் உள்ளுர மகிழ்வதுமாக மனத்தினால் அநாகரிகமாகவும் உடம்பினால் நாகரிகமாகவும் வாழ்வதில் வெட்கப்படமாட்டார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். முதுகெலும்பு இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னளவில் எந்த நிமிடமும் எதையும் நியாயமாக எதிர்கொள்ளத் தயாராக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. சிறிதுநேரத்தில் கல்லூரி முதல்வர் தம்முடைய அறைக்குக் கூப்பிட்டனுப்புவார் என்று எதிர்பார்த்திருந்தான் அவன். ஊழியன் வந்து சென்றதும், சத்தியமூர்த்தி உரத்த குரலில் அவனுக்கு மறுமொழி கூறி அனுப்பியதும் ஆசிரியர்கள் அறையில் அசாதாரணமானதொரு மெளனத்தையும், வஞ்சகமானதொரு அமைதியையும் நிலவச் செய்திருந்தன. -

சிறிது நாழிகையில் கல்லூரி முதல்வரே டக், டக்கென்று பூட்ஸ் ஒலிக்க நடந்து வந்து ஆசிரியர்கள் அறையில் படியேறி நுழைந்தார். ஒவ்வொரு படியாக மேலேறி அந்த பூட்ஸ் ஒலி அருகில் வரவரப் பயந்த சுபாவமுள்ள ஆசிரியர்களைச் சுற்றிலும் ஏதோ ஒரு விதமான அமைதி அதிகமாவது போலிருந்தது! அதன் பின்பு நடந்தவையெல்லாம் நாடகக் காட்சி போலிருந்தது. அறையில் நுழைந்ததும் எல்லோருடைய பார்வையிலும் படுகிறாற்போல் முகப்பில் நின்று கொண்டு "மிஸ்டர் சத்தியமூர்த்தி உங்களுக்குத்தான் ஒரு விஷ்யம் சொல்லிவிட்டுப் போகவந்தேன். இன்று 'அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் நீங்கள் நேரம் குறிப்பிடவில்லை. நியாயமாக நடந்து கொள்வதில் எல்லோருக்குமே கவனம் வேண்டும். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறவர்களுக்கு நியாயத்தில் இன்னும் அதிகமான கவனம் வேண்டும்" என்று ஏதோ பேசஆரம்பித்துச்சீறினார். சத்தியமூர்த்தி எழுந்து நின்று நிதானமாகப் பதில் கூறலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/295&oldid=595423" இலிருந்து மீள்விக்கப்பட்டது