பக்கம்:பொன் விலங்கு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பொன் விலங்கு

'நீங்கள் சொல்வதைச் சிறிதும் மறுக்காமல் அப்படியே ஒப்புக்கொள்கிறேன் சார் மறந்து விட்டதன் காரணமாகவோ அல்லது கவனக் குறைவாகவோ நேரம் குறிக்காமல் விடவில்லை. வேண்டுமென்றேதான் நேரம் குறிப்பதைக் கைவிட்டிருக்கிறேன். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து காப்பாற்றுகிறவரைதான் சார் நியாயத்துக்கு மரியாதை உண்டு. நீங்கள் எப்படி இருந்தாலும் நான் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நான் நியாயமாயிருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதையும் சேர்த்து மன்னிக்கிற பொறுமை எனக்கு இருக்கவேண்டும் என்றால் அது எப்படி ஒழுங்காகும்? நீங்கள் சுற்றறிக்கை அனுப்பிய நாளிலிருந்து நானும் பார்த்துக்கொண்டு வருகிறேன். நாங்கள் எல்லோரும் வருகிற நேரத்தைக் குறிக்கிறோம். நீங்களும் உங்களுடைய துணை முதல்வரும், இன்னும் சில பேராசிரியர்களும் மட்டும் நேரம் குறிப்பதில்லை. நான் இரண்டு மூன்று நாள் இதைத் தொடர்ந்து கவனித்தேன். இன்றிலிருந்து என் கையெழுத்துக்குக் கீழேயும் நேரம் போடுவதை நிறுத்தி விட்டேன்."

'இருக்கலாம். ஆனால் என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்?"

'நான் யாரா? நான் உங்களுக்குக் கீழே பணிபுரிகிறவன் என்பதே உங்களை இப்படிக் கேட்கப் போதுமான தகுதிதான் சார். ‘என்னைக் கேட்க நீங்கள் யார்?' என்று மாணவர்களிடம் கூட ஆசிரியர்கள் கேட்க முடியாத கேட்கக்கூடாத காலம் சார் இது யாரை ஆள்கிறோமோ அவர்களிடம்தான் அதிகப் பெருந்தன்மை காண்பிக்க வேண்டுமென்பது இந்த நூற்றாண்டின் இரகசியம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்."

"நிறுத்துங்கள். நீங்கள் அதிகம் பேசுவது நன்றாயில்லை."

"பயப்படாதீர்கள் சார்!நான் பேசுவதாலோ, நீங்கள் கேட்பதாலோ மரியாதைக் குறைவு ஆகிவிடாது. இந்தக் கல்லூரி காலை பத்து மணிக்கு ஆரம்பம் என்று தெளிவாக எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, நேரம் குறிப்பது எதற்கு? ஏதோ ஒருநாள் யாரோ இரண்டு விநாடி தாமதித்து வந்தால் அதற்காக எல்லோருமே தாமதமாக என்றைக்குமே வருவதாகப் பாவித்துக்கொண்டு நீங்கள் ஏன் சிரமப்படவேண்டும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/296&oldid=595425" இலிருந்து மீள்விக்கப்பட்டது