பக்கம்:பொன் விலங்கு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 295

ஒன்றும் பதில் கூறாமல் கல்லூரி முதல்வர் சில விநாடிகள் ஆசிரியர் அறையில் இங்கும் அங்குமாக இரை தேடுகிற புலிபோல் நடந்தார். போவதற்கு முன் எல்லா ஆசிரியர்கள் பக்கமாகவும் திரும்பி, "எனக்கென்ன வந்தது? உங்களுக்கு எல்லாம் விருப்பம் இல்லையானால் நாளையிலிருந்து யாரும் நேரம் குறிக்க வேண்டியதில்லை" என்று வேண்டாவெறுப்பாகச் சொல்லிவிட்டுப் போனார் முதல்வர். அவர் இப்படி வந்து இரைந்துவிட்டுப் போன சிறிது நேரத்துக்குப் பின் தபால்காரர்சத்தியமூர்த்தியைத் தேடிவந்து ஸ்டாம்ப் ஒட்டாத கடித உறை ஒன்றை நீட்டிக் கட்டணம் வசூலித்துக்கொண்டு போனார். ஏதோ ஒரு நியாயத்துக்காகச் சத்தமிட்டுப் பேசிவிட்டு உட்கார்ந்திருந்த மறுகணம் ஸ்டாம்ப் ஒட்டாத கடிதத்தை வாங்க நேர்ந்ததும், அதை அனுப்பியது யாராயிருந்தாலும் கோபப்படுவதற்குரியவராகத் தோன்றியது அவனுக்கு. குழந்தைக் கையெழுத்துப் போல் எழுத்துக்கள் மேலும் கீழுமாக வலித்துக் கொண்டு போகும்படி பென்சிலில் எழுதிய முகவரி. ஸ்டாம்ப் ஒட்டாத தவறு தவிர, அந்த முகவரியிலும் வேறு நாலைந்து தவறுகள் இருந்தன. சத்தியமூர்த்தி அவர்கள்-ஆசிரியர் காலேஜ்-மல்லி கைப் பந்தல்-என்று மட்டுமே முகவரி எழுதப்பட்டிருந்தது. அந்த ஊரில் ஒரே கல்லூரி மட்டுமே இருந்ததாலோ அல்லது ஆசிரியராக வேறு சத்தியமூர்த்தி இல்லாததனாலோ கடிதம் இலக்குத் தப்பாமல் வந்து சேர்ந்திருந்தது. முதல்வரிடம் சொற்போர் நடத்தி முடிந்த வேகம் தணியாத மனநிலையில் பென்ஸில் எழுத்து முகவரியும், ஸ்டாம்ப் ஒட்டாத தண்டமும் மனத்தை உறுத்த, அதை எழுதியவர்மேல் கோபத்தோடு கடிதத்தைப் பிரித்தான் சத்தியமூர்த்தி. எவ்வளவுக்கெவ்வளவு கோபத்தோடு அந்தக் கடிதத்தைப் பிரித்தானோ அவ்வளவுக்கவ்வளவு அநுதாபத்தோடும் மன நெகிழ்ச்சியுடனும் படிக்கவேண்டிய கடிதமாயிருந்தது அது. யாரிடமிருந்து வந்திருந்ததோ அவளிடமிருந்து இப்படி ஒரு கடிதத்தை இங்கே அவன் எதிர்பார்க்கவேயில்லை.

"என்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வத்தின் திருவடிகளில் அடியாள் மோகினி அநேக வணக்கங்கள். நான் என் மனத்தில் என்னென்ன நினைக்கிறேனோ அவற்றையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/297&oldid=595427" இலிருந்து மீள்விக்கப்பட்டது