பக்கம்:பொன் விலங்கு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 297

ஒழுங்காக அமைந்து மயக்கிவிடுகிற தன்மை இதில் இல்லா விட்டாலும் ஒரு பரிசுத்தமான மனம் துடிப்பது இதில் நன்றாகத் தெரிந்தது. திடநெஞ்சமுள்ள சத்தியமூர்த்தியையே மெளனமாக அழச்செய்திருந்தது அந்தக் கடிதம். உங்களுக்குச்சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் நீங்கள் இல்லாமல் தூசி படிந்துபோய் மூலையில் கிடக்கிறது என்ற கடைசி வாக்கியத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் சத்தியமூர்த்தி, சின்னஞ்சிறு சந்தாகிய சங்கீத விநாயகர் கோவில் தெருவும், மீனாட்சி கோவில் கோபுரங்களும், தன் வீடும், அம்மாவும், அப்பாவும், தங்கைகளும், நண்பன் குமரப்பனும் ஞாபகம் வந்து மரத்தை வேரோடு பறிப்பதைப்போல் ஊர் ஏக்கம் நெஞ்சைப் பறித்தது. சில நாழிகை நேரம் உட்கார்ந்திருந்த இடத்தையும் சூழ்நிலையையும்கூட மறந்துபோய் ஊர் ஞாபகத்தில் ஈடுபட்டிருந்தான் அவன். 'யாரோ ஒரு பெண் எப்போதோ இரயில் சந்தித்த சந்திப்பு. அந்தச் சந்திப்புக்கு நிலையாக என்ன மதிப்பு இருக்கிறது? என்று எண்ணி மோகினியை அவனால் மறந்துவிட முடியவில்லை. சித்ரா பெளர்ணமி இரவில் நிகழ்ந்த ஆண்டாள் நாட்டியத்திலிருந்து அவளுடனே தொடர்புடைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனை ஆட்கொண்டன. முருகன் படத்திலிருந்து நழுவிக் கழுத்தில் விழுந்த மாலையோடு தன் தோள்களைப் பற்றிக்கொண்டு "இப்படியே இருங்கள் இந்த மாலையைக் கழற்றாதீர்கள் உங்களை இதே கோலத்தில் கண் நிறையப் பார்க்கவேண்டும் போல ஆசையாயிருக்கிறது' என்று கெஞ்சியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். மனம் இந்த ஞாபகத்தில் வேறெல்லாக் குழப்பங் களையும் மறந்துவிட்டது. கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் கையெழுத்துப் போடும் நோட்டுப் புத்தகத்தில் நேரம் குறிப்பிடாததற்காகச் சண்டைக்கு வந்ததையும், அதையொட்டி, அவரும் தானும் காரசாரமாக விவாதம் செய்ததையும், என்றோ நடந்தது போல் மறந்திருந்தான் அவன். -

"கவலைப்படாதே என்னுடைய வாத்தியத்தை மீட்டி இனிய பண்களை வாசிப்பதற்காக நான் ஒரு நாள் வருவேன். அதுவரை பொறுத்திரு. உன் ஞாபகம் இல்லாத, நேரமே கிடையாது. சில நாட்களுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்களுக்காக வீ வாக்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/299&oldid=595431" இலிருந்து மீள்விக்கப்பட்டது