பக்கம்:பொன் விலங்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பொன் விலங்கு

அடிதடிவம்புகளுக்கும் கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் பெயர்பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந் தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப்பற்றி நினைக்கும்போது நான் பயப்படுவது நியாயம்தானே?"

"இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்லூரி ஒன்றில் படித்து உருவாகி வளர்ந்ததினால்தான் உங்கள் கல்லூரியைப்போல் ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இலட்சியக் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு உண்டாகியிருக்கிறது. அந்தக் கல்லூரியில் படிப்பைத்தான் நான் கற்றுக் கொண்டேனே ஒழியக் குழப்பங்களையும் அடிதடியையும் தேடிக் கற்றுக் கொள்ளவில்லை."

-என்று சத்தியமூர்த்தி தலை நிமிர்ந்து மறுமொழி கூறியபோது எதிரே ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்த பாரதியின் இதழ்களில் சிரிப்பு இழையோடியது. அவனுடைய மறுமொழியை அவள் இரசித்து மகிழ்கிறாள் என்பதற்கு அந்தச் சிரிப்பு ஓர் அடையாளமாக இருந்தது.

"உங்கள் வார்த்தைகளை நான் அப்படியே நம்புகிறேன் சத்தியமூர்த்தி! ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக்கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே? கல்லூரி மாணவர் யூனியனின் தலைவராக இரண்டுமுறைகள் தொடர்ந்து நீங்களே இருந்திருக்கிறீர்கள். தவிர இதோ இந்த சர்டிபிகேட் கல்லூரி நாட்களில் நீங்கள் மேடைப் பேச்சிலும், விவாதம் செய்வதிலும் இணையற்றவர் என்று வேறு சொல்கிறது. இவ்வளவும் உள்ள ஒருவர் அரசியல் குழப்பங் களிலிருந்து எப்படித் தப்பியிருக்க முடியும் என்று நான் சந்தேகப்படுகிறேன்..."

"சந்தேகப்படுவதற்கு எவ்வளவு உரிமை உங்களுக்கு உண்டோ அவ்வளவு உரிமை அதை மறுப்பதற்கு எனக்கும் உண்டு. ஒவ்வொரு சந்தேகத்துக்கும் அதை மறுப்பவனுடைய தெளிவிலிருந்துதான் ஆயுள் கணிக்கப்படுகிறது. மேடைப் பேச்சும், விவாதத் திறமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/30&oldid=1405652" இலிருந்து மீள்விக்கப்பட்டது