பக்கம்:பொன் விலங்கு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 301

ஒடுங்குகிற மெல்லிய மனம் மனித சாதியில் வேறொருவருக்கும் இருக்க முடியாது என்பதை உலகில் நேற்றுவரை பிறந்து வழங்கும் காவியங்களின் பரம்பரையெல்லாம் நிரூபிக்கின்றன. ஏமாற்றத்தில் பிறக்கும் ஒரு வகைக் கோபத்தோடு பாரதி படகை வேகமாக வலித்துக்கொண்டு போய்விட்டாள். ஆனாலும் அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. படகில் இருட்டுகிறவரை சுற்ற நினைத்திருந்தவள், பாதியிலேயே கரையேறி, "எனக்குத் தலைவலி... வீட்டுக்குப் போகிறேன்' என்று தோழிகளிடம் சொல்லித் தப்பித்துக் கொண்டாள். எந்த அறை பெண்ணின் அகங்காரத்தின் மேல் ஓங்கி விழுகிறதோ அந்த அறைக்கு வலி அதிகம். பெண்ணுக்கு ஏற்படுகிற அகங்காரங்களில் எல்லாம் மிகப் பெரிய அகங்காரம் அன்பு காரணமாக ஏற்படுவதாகத்தான் இருக்க முடியும். அப்படி ஓர் அகங்காரம் தன்னிடம் இருப்பது சில சமயங்களில் பெண்ணுக்கே தெரியாமற் போகலாம். ஆனால், அன்பு காரணமாக ஏமாறும் போதும், பிரியும்போதும், இப்படி ஓர் அகங்காரம் தன்னிடம் இருந்தது என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர முடியும். சத்தியமூர்த்தி தான் ஆர்வத்தோடு அழைத்த குரலுக்குப் பதிலே சொல்லாமல் பாராமுகமாக இருந்ததை எண்ணி எண்ணி வேதனைப்பட்டாள் பாரதி. வீட்டுக்குத் திரும்பியிருந்தாலும் அங்கு அவளுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

நாலைந்து மாணவர்கள் புடை சூழ்ந்து அமர்ந்து உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்த வேளையில் அவள் குறுக்கிட்டு அழைத்ததை விரும்பாததனால்தான், சத்தியமூர்த்தி கவனிக்காத வனைப்போல் இருந்துவிட்டான். மாணவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் உணவு விடுதிக்குப் போய் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, அறைக்குத் திரும்பியபின் அவனும் இதைப் பற்றித்தான் சிந்திக்கத் தொடங்கியிருந்தான். பாரதியிடம் வேண்டுமென்றே தான் பாராமுகமாக இருந்ததாகத் தான் அவனும் உணர்ந்திருந்தான். அந்த வேளையில் அப்படிப் பாராமுகமாக இருக்க வேண்டுமென்ற பிடிவாத உணர்ச்சி தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/303&oldid=595443" இலிருந்து மீள்விக்கப்பட்டது