பக்கம்:பொன் விலங்கு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நா.பார்த்தசாரதி 303

புண்படுத்தியிருக்க முடியும் என்பதும் அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அவன் பாரதியிடம் அளவாகவும், கண்டிப்பாகவும் பழக வேண்டுமென்றே தன் மனத்திற்கு அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தான். அந்தக் கல்லூரியின் சூழ்நிலையும், வம்புபேசும் மனப்பான்மையும், கோள் சொல்லும் குணமுள்ளவர்கள் அங்கு நிறைந்திருப்பது தெரிந்து அவன் எச்சரிக்கையாக இருக்க விரும்பினான். கல்லூரி வகுப்பு நேரங்களிலும், வெளியேயும் பாரதி அடிக்கடி தன்னைச் சந்திக்க விரும்புவதைத் தவிர்த்துத் தான் அவளிடமிருந்து விலகி நிற்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. ஆர்வத்தோடு ஓடி வந்து அவள் தன் எதிரே நின்று சிரித்துப் பேசுவதையும் பாராட்டுவதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். அந்த நினைப்பைச் செயலாக்கத் தொடங்கும் போது மாலையில் நிகழ்ந்தது போல் பாரதியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. உலகில் எல்லா விதமாகவும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டு வகையான அன்பு உண்டு. யார்மேல் அன்பு செய்ய விரும்புகிறோமோ அவரையே ஆள விரும்புகிற அன்பு ஒன்று. யார் மேல் அன்பு செய்ய விரும்புகிறோமோ அவருக்கே ஆட்படுகிற அன்பு ஒன்று. ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும், ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பில் தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. ஆள விரும்புகிற அன்புக்கு உலகில் காதல் என்றும் பிரேமை என்றும், விதம்விதமாகப் பெயர் சொல்லுகிறார்கள், ஆட்படுகிற அன்புக்குப் பக்தி என்று பெயர் சொல்லுகிறார்கள்.

'பாரதியும் என்மேல் அன்பு செலுத்துகிறாள். மோகினியும் என் மேல் அன்பு செலுத்துகிறாள். ஆனால், நானே நுணுக்கமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது இந்த இருவருடைய அன்பிலும் வேறுபாடு இருக்கிறது. பாரதியின் அன்பு என்னை ஆள விரும்புகிற அன்பு, மோகினியின் அன்போ என்னை ஆட்படுகிற அன்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/305&oldid=595447" இலிருந்து மீள்விக்கப்பட்டது