பக்கம்:பொன் விலங்கு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 307

விடுவார்கள். குழந்தைகளின் அழு குரல்கள் சிறுவர்கள் பந்தலில் கட்டியிருக்கும் வாழை மரத்துப் பட்டையைப் பிய்த்துத் தரையில் அடித்தால் யாணைவெடிவெடிக்கிற ஓசைவருகிறதா இல்லையா என்று பரிசோதிக்கும் ஓசைகளும் ஏலே சும்மா இருக்கியா முதுகுத் தோலை உரிக்கட்டுமா?' என்று பெரியவர்கள் சிறுவர்களை அதட்டுகிற குரலுமாகச் சுற்றுப்புறமெல்லாம் ஒரே சந்தோஷப் போர்க்களத்தைப் போலிருக்கும். இந்தப் போர்க்களத்தினிடையே பணம் வாங்கி ஆட ஒப்புக் கொண்டுவிட்ட காரணத்தினால் ஆடுகிறவள் எதையுமே அவமானமாகக் கருதாமல் தலைவிதியே என்று சதிராடி முடிக்க வேண்டும். கலியாண வீட்டுக்காரரோ பின்னால் அங்கங்கே கலியாணத்தைப் பற்றி விசாரித்துப் பேசிக்கொள்கிறவர்கள் எல்லாரும் 'இன்னார் வீட்டுக் கலியாணத்திலே இன்னாருடைய சதிர்க் கச்சேரி நடந்ததாமில்லே?" என்று பேசிக் கொள்ள வேண்டும் என்ற பொய் கெளரவத்திற்காக மட்டுமே இத்தனை தாராளமாகவும் தடயுடலாகவும் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருப்பார். எல்லாமே ஒரு நாடகமாக இருக்கும். மூன்று-மூன்றரை மணிநேரம் வேர்க்க விறுவிறுக்க கால் கடுத்துப்போய் ஆடிய பின் கடைசியில் வெற்றிலைப் பாக்குத் தேங்காய் பழம் சந்தனம் புதுப்புடவை-பணம் வைத்து மிகவும் கெளரவமாக (அவ)மரியாதை செய்தனுப்புவதுடன் இந்தக் கலை நாடகம் முடிவது வழக்கம். அம்மாவின் பாகாசுரப் பணத்தாசையை அடிக்கடி நிறைவேற்றுவதற்காக மோகினியும் இந்த நாடகத்தை அவ்வப்போது அங்கங்கே ஆடியாக வேண்டியிருக்கிறது.

அம்மாவின் பணத்தாசையைத் தூண்டிவிடுவதுபோல் கண்ணாயிரமும் யாரையாவது அழைத்துக்கொண்டு வந்து கலியாணச் சதிர்க் கச்சேரிக்குச் சிபாரிசு செய்த வண்ணமாக இருந்தார். 'நல்லவேளையாக இது சின்ன ஊராய் இருப்பதனால் எல்லாருமே பாராமுகமாக இருந்து விடமாட்டார்கள். சிலராவது பதிவாக உட்கார்ந்து நாட்டியத்தைப் பார்ப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை மீதம் இருந்தது அவளிடம். ஆனால் அதே சமயத்தில் இந்தமாதிரி சின்ன ஊர்களில் இன்னொரு தொல்லை. இதை ஆடு, அதை ஆடு என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே கூக்குரல் போடுவார்கள். அல்லது சீட்டெழுதி அனுப்புவார்கள். எப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/309&oldid=595455" இலிருந்து மீள்விக்கப்பட்டது