பக்கம்:பொன் விலங்கு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி J09 நிகழ்ச்சி முடிந்தது. கலியான வீட்டுச் சதிர்க் கச்சேரி என்னும் ஆடம்பர நாடகத்தின் முடிவான கடைசிப் பகுதியும் வந்தது. கலியாண வீட்டுக்காரரும் இன்னும் நாலைந்து பெரிய புள்ளிகளும் இரத்தினக் கம்பளம் விரித்த கூடத்தில் வெற்றிலைப் பாக்குத் தேங்காய் பழம்-புதுப் புடவை சந்தனக் கிண்ணம் எல்லாம் தயாராக வைத்துச் சதிர்க் கச்சேரி ஆடியவளுக்குப் பணம் கொடுப்பதற்குக் காத்திருந்தார்கள். கண்ணாயிரத்தையும், அம்மாவையும் பின்தொடர்ந்து அடக்க ஒடுக்கமாக நின்றாள் மோகினி. கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் ஐம்பது அறுபதைக் கடந்து முதியவர்களாக இருந்தும், பார்வை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றையும் அந்த முதுமையோடு பொருந்தாமல் அசடு வழிந்தது. தன்னைத் துளைத்தெடுப்பதுபோல் பார்க்கத் தொடங்கிய அந்தக் கண்களுக்கு முன் நிற்கவே அருவருப்பாயிருந்தது அவளுக்கு. பணத்தையும் மரியாதை என்ற பேரில் அவர்கள் செய்து கொண்டிருந்த அவமரியாதையையும் ஏற்றுக் கொள்ளாமலே திரும்பிப் போய்விடலாம் போலக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது மோகினிக்கு. எவ்வளவு நேரம்தான் கால்கடுக்கக் காத்துக்கொண்டு நிற்பது? கூட்டத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் மிகவும் முதியவரான ஒருவர் அந்த முதுமைக்கும் வயதுக்கும் பொருந்தாத 'மைனர் சிரிப்போடு கண்களை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கண்ணாயிரத்தை அருகே கூப்பிட்டு காதருகே ஏதோ சொன்னார். கண்ணாயிரம் அதே பாணியில் அதே செய்தியைக் காதருகே வந்து முத்தழகம்மாளிடம் மெல்ல அஞ்சல் செய்தார். மோகினி உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு முன்பு நிற்கவே பிடிக்காமல் மனம் குமுறியபடி நின்று கொண்டிருந்தவள் இதையெல்லாம் கவனித்து மேலும் அதிகமாகக் குமுறலானாள். அம்மா மோகினியின் காதருகே வந்து, 'டீ உன்னைத்தானே! பொது இடத்திலே மாட்டேன்னு சொல்லி நாலு பேர் முன்னே என் மானத்தை வாங்கிப்பிடாதே. நம்மவங்களுக்கு இது ஒண்னும் புதுசில்லே. நாம இப்படிச் செய்யற வளமுறை உண்டு. பெரியவங்களா இங்கே உட்கார்ந்திருக்கிற நாலு பேருக்கு உங்கையாலே கொஞ்சம் சந்தனத்தைத் தொட்டுப் பூசிட்டுப் பெறவு மரியாதையை வாங்கிக்க' என்று தணிந்த குரலில் முணுமுணுத்தாள். அதுதான் சமயமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/311&oldid=846970" இலிருந்து மீள்விக்கப்பட்டது