பக்கம்:பொன் விலங்கு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பொன் விலங்கு

போயிடும். நாளடைவிலே தானாகத் தெரிஞ்சுக்குவான். புதுமோகம் இப்படித்தான் இருக்கும்' என்று முதல்வர் வேறு யாரிடமோ கேலியாகப் பேசியதைத் தான் கேட்டதாக ஒரு மாணவன் சத்தியமூர்த்தியிடம் வருத்தத்தோடு வந்து கூறியிருந்தான். இன்னொரு வகுப்பில் ஆங்கிலப் பேராசிரியரிடம் சத்தியமூர்த்தி வீ வாக்ஸ் இன் பியூட்டி என்ற கவிதையை அழகுற விளக்கிய பெருமையை மாணவர்கள் சொல்லிப் புகழ்ந்தார்களாம். சத்தியமூர்த்தியைப் பற்றிய புகழ்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பேராசிரியர், 'உங்கள் மனப்போக்கு தெரிந்து உங்களுக்குப் பிடித்தமான காதல் கவிதையைத் தேடிப் பிடித்து விளக்கினால் கொண்டாடத்தானே செய்வீர்கள்? இந்தப்புகழ்ச்சியும் மகிழ்ச்சியும் சிறுபிள்ளைத்தனமான காரியங்கள். இதனால் பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணிவிட முடியாது...' என்று அதிகப் பொறுப்புள்ள வரைப் போல் பேசிப் பொறாமைப்பட்டாராம். இப்படிப்பட்ட செய்திகளைச் சத்தியமூர்த்தி தெரிந்துகொள்ள விரும்பாவிட்டாலும் அவனுடைய பெருமையில் அக்கறையுள்ள மாணவர்கள் இவற்றை அவனுக்குத் தெரிவிக்கத் தவறுவதில்லை. வேறொரு பேராசிரியர், 'ஆள் பார்க்க நன்றாக இருந்தாலே உங்களுக்கெல்லாம் பிடித்துப் போகுமே? கேட்கவேண்டுமா?" என்று சத்தியமூர்த்தியைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டாராம். சத்தியமூர்த்தி கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்படிச் செய்திகள் நிறைய வந்து அவன் செவிகளை எட்டிக் கொண்டிருந்தன.

'பிள்ளைகளை அரட்டிமிரட்டிவைத்திருந்தால்தான் அவர்கள் தங்களிடம் ஓரளவாவது மரியாதை வைப்பார்கள்' என்ற தப்பபிப்பிராயம் பெரும்பாலான ஆசிரியர்களிடம் இருப்பதை சத்தியமூர்த்தி அறிந்து வருந்தினான். திறமையால் கவர்ந்து மதிப்பைப் பெற முடியாமல் பயமுறுத்திக்கவர்ந்து மதிப்பைப் பெற முயலும் இந்த முயற்சியை வியந்தான் அவன். உதவி வார்டன் என்ற முறையில் அவன் மாணவர் விடுதிகளை அடிக்கடி சுற்றிப் பார்த்தான். ஆனால் வார்டன் அப்படிச் சுற்றிப் பார்ப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/314&oldid=595465" இலிருந்து மீள்விக்கப்பட்டது