பக்கம்:பொன் விலங்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO பொன் விலங்கு

அதிகமான தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் தேடிக் கற்று என் படிப்பை நான் ஆழமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றாக நிரூபிக்க முடியும்."

சத்தியமூர்த்தி உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசியதைக் கேட்டுப் பூபதி மெல்லச்சிரித்தார். "நீ உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசும் அழகைக் கேட்பதற்காகவே இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டேன்' என்று சொல்வது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரித்துக் கொண்டே தன் மகள் பாரதி நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி, 'அம்மா அந்தப் புத்தக அலமாரியின் மேல் தட்டில் மேற்குக் கோடியில் ஹட்ஸனின் இண்ட்ரொடக்ஷன்-டுஸ்டடி ஆஃப் லிட்ரேச்சரும் ரிச்சர்ட்ஸின் லிட்டரரி கிரிடிஸிஸ்'மும் இருக்கும், ஸ்டுலைப் போட்டுக் கொண்டு மேலே ஏறி அவைகளை எடு அம்மா...' என்றார் பூபதி. -

பாரதி ஸ்டுலை நகர்த்தி, மேலே ஏறி நின்று அலமாரியிலிருந்து புத்தகங்களைத் தேடி எடுப்பதையே ஒர் அழகிய அபிநயம்போல் செய்யத் தொடங்கினாள். நிலவின் கதிர்களை உருக்கிப் படைத்தாற் போன்ற அந்த நளின விரல்கள் புத்தகத்தைத் தேடி எடுக்கும் காட்சியைச் சத்தியமூர்த்தி இமையாமல் பார்த்துக்கொண்டிருந்தான். புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து தந்தையின் முன்பாக மேஜையில் வைத்துவிட்டுப் பழையபடி ஒதுங்கி நின்றுகொண்டாள். அந்தப்பெண் புத்தகங்களை வைப்பதற்காக ஒரே ஒரு கணம் தந்தையின் மேஜையருகே வந்தபோது மறுபடியும் அவனுடைய அந்தச் சிவந்த பாதங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவள் கண்களுக்குக் கிடைத்தது. ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும், தோன்றிய இடத்தில் பிரித்து அந்தப் பக்கங்களில் இருந்தவற்றைக் கொண்டு ஏதோ சில கேள்விகளைச் சத்தியமூர்த்தியிடம் கேட்டார் பூபதி. அவருடைய கேள்விகளுக்கு தெளிவாகவும், அழகாகவும் உடனுக்குடன் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. இந்தக் கேள்விகளைத் தனக்கு நேரும் சோதனைகளாகவோ, சிரமங்களாகவோ அவன் கருதவில்லை. தன் திறமையை நிரூபிக்க நேரும் சந்தர்ப்பங்களாக இவற்றை வரவேற்று மகிழ்ச்சியோடு மறுமொழி கூறினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/32&oldid=595477" இலிருந்து மீள்விக்கப்பட்டது