பக்கம்:பொன் விலங்கு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - பொன் விலங்கு

அந்தச் சாயங்கால வேளையில் எந்தவிதமான வேகமும் பரபரப்புமில்லாமல், வாழ்க்கையே மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிற மல்லிகைப் பந்தலைப் போன்ற ஒரு மலைநாட்டு நகரத்தின் மாடி வராந்தாவில் குமரப்பனின் கடிதத்தோடு உட்கார்ந்து அவனைப் பற்றிச் சிந்திப்பதே சுறுசுறுப்பையும் துணிவையும் தருகிற அநுபவமாக இருந்தது. குத்துவிளக்கில் பிரசுரம் செய்வதற்காகக் கண்ணாயிரத்தோடும், உதவியாசிரியரோடும் மோகினியைப் பேட்டி காணச் சென்றதைப் பற்றியும், அப்போது மோகினியின் வீட்டில் நிகழ்ந்தவற்றைப் புற்றியும் அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்கு எழுதியிருந்தான் குமரப்பன். அந்தக் கடிதத்தில் மோகினியைப் பற்றி மிகவும் பெருமையாக எழுதியிருந்தான். குத்துவிளக்கில் வெளியிடுவதற்காகத் தான் எடுத்த மோகினியின் உருவப்படங்கள் இரண்டிலும் ஒரோர் பிரதி கடிதத்தோடு இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். அந்தக் கடிதத்தை மற்றொரு முறையும் படிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

“...சித்ரா பெளர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் நீயும் நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நீ கூறியிருந்த ஒரு வாக்கியத்தை மோகினியைப் பேட்டி காண்பதற்காகச் சென்றிருந்த தினத்தில் மறுபடியும் நினைத்தேனடா சத்தியம்! மோகினியைப் போன்றவர்களின் துன்புத்துக்காக யாரும் இயக்கம் நடத்தமாட்டார்கள்; அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியதுதான் என்று நீ அன்று கூறியபோது நான் உன்னை மறுத்துப் பேசினேன். இப்போது நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த மாதிரி வீடுகளில் ஏதோ ஒரு கலையையும் யாரோ பல மனிதர்களையும் நம்பி வாழ்கிற சராசரியான பெண்களைப்போல் மோகினியும் இருந்து விட்டால் வம்பில்லை, அவளால் அப்படி இருக்க முடியாது. நரகத்தின் நடுவே தன் ஒருத்தியினுடைய நினைப்பினாலும் செயல்களாலுமே சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு வாழ முயல்கிறாள் அவள். மோகினியைப் பேட்டி காண்பது என்ற பெயரில் கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் வேறு ஏதேதோ காரியங்களைச் சாதித்துக் கொள்ள முயன்றார்கள். அத்தனை அடக்குமுறைக்கு நடுவிலும் அந்தப் பெண்ணிடம் ஒரளவு தன்னம்பிக்கையும், தைரியமும் மீதமிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேனடா, சத்தியம் உங்களுடைய ஆண்டாள் நடனத்தை நீங்களே மனம் விரும்பி, உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/324&oldid=595487" இலிருந்து மீள்விக்கப்பட்டது