பக்கம்:பொன் விலங்கு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 323

மயமாகவும் பரிபூரணமாகவும் ஆடிய தினத்தைப் பற்றிய அநுபவத்தை நீங்கள் குத்துவிளக்கு வாசகர்களுடன் பங்கிட்டுக் கொண்டு கூறமுடியுமா? என்றாற்போல் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில், நவராத்திரியின் போது ஜமீன்தார் முன்னிலையில் ஆட நேர்ந்த சமயத்தில்தான் இவள் பரிபூரணமாக உணர்ந்து ஆடினாள் என்று கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் இந்தக் கேள்விக்குத் தாங்களாகவே முந்திக் கொண்டு பதில் சொன்னார்கள். ஆனால் மோகினி இந்தப் பதிலை மறுத்துவிட்டு சித்திரா பெளர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடியபோதுதான் நான் என்னை மறந்து இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன். அதைப்போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை எனப் பதில் கூறினாள். இந்தப் பதில் அவளுடைய துணிவை நான் புரிந்து கொள்ளத் துணைசெய்தது. கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் அவளைப் படுத்திய பாட்டில் பாதிப் பேட்டி நடந்து கொண்டிருந்தபோதே அவள் அழுகையை அடக்கமுடியாமல் தவித்ததை என் கண்களாலேயே பார்த்தேன். பேட்டி முடிந்ததும் அவள் அழுதுகொண்டே எழுந்திருந்து மாடிக்குப் போனாள். இந்தக் கடிதத்தோடு நான் உனக்கு அனுப்பியிருக்கிற படங்களில் சிரித்துக்கொண்டிருக்கிற மோகினியைப் பார்த்தால் இதே படங்களைப் பிடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் கண்கலங்கி அழுதிருக்க முடியும் என்பதைக்கூட நீ கற்பனை செய்யமுடியாது. ஆனால் வாய்விட்டுக் கதறியோ, அல்லது வாய்விட்டுக் கதற முடியாத மெளனத்துடனோ, அவள் சதாகாலமும் எதற்காகவோ அழுதுகொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை. அவளுடைய முகத்தையும் கண்களையும் மிக அருகில் பார்க்கும்போது இரவிவர்மா வரைந்திருக்கிற கலைமகளின் தெய்வீகத் திருவுருவம் நினைவு வருகிறதடா சத்தியம். படத்தில் சிரித்துக்கொண்டிருப்பதுபோல் அவள் எப்போதாவது தப்பித் தவறிச் சிரித்தால்கூட அந்தச் சிரிப்பில் இலட்சுமிகரம்' நிறைந்திருக்கிறது.

திருமகளைச் சரண் புகுதல் என்ற தலைப்பிலே மகாகவி பாரதியார் எழுதியிருக்கும் கவிதையை நீ படித்திருப்பாயடா சத்தியம். அந்தக் கவிதையிலே திருமகள் எங்கெங்கே வாசம் செய்கிறாள் என்பதைச் சொல்லும் போது 'பரிசுத்தமான கன்னிப்பெண்களின் நகைப்பிலும் அவள் வாசம் செய்வதாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/325&oldid=595489" இலிருந்து மீள்விக்கப்பட்டது