பக்கம்:பொன் விலங்கு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 - பொன் விலங்கு பஞ்சராகிக் கார் நின்று போய் விட்டதைப் பார்த்து அந்தப் பெண்ணும் இளைஞனும் எழுந்திருந்து சாலையோரமாக வந்தனர். காரையும் மோகினியையும், அவள் அம்மாவையும் ஏதோ ஒரு பெரிய ஆச்சர்யங்களைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள் அவர்கள்.

"அத்தான்! யாரோ சினிமாக்காரங்க போலிருக்கு. அந்தப் பெண்ணைப் பாரு.ரதியாட்டமிருக்கு..."

"சும்மானாச்சும் காது குத்தாதேம்மே! உன்னைக் காட்டியுமா அவ அழகுங்கிறே?"

-அவர்கள் தங்களுக்குள் மிக மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தும் இந்த உரையாடலை மோகினியும் கேட்க நேர்ந்தது. தான் அழகு என்று அந்தப் பெண் தன்னைப் புகழ்ந்ததையும், தன்னைவிட அவளே அழகு என்று. அவளுடைய அரும்பு மீசைக் கட்டுக்குடுமி கட்டழகனான அத்தான் அவளைப் புகழ்ந்ததையும் கேட்டு தன்னுடைய வேதனைகளையும் மறந்து சிரிக்கத் தோன்றியது மோகினிக்கு. நெடுந்துரம் ஆள் நடமாட்டமில்லாத அந்த பொட்டல் காட்டில் வாழ்க்கையின் சுகங்களுக்குப் பிரதிநிதிகளைப்போல் அந்தக் குடிசை வாசலில் அவர்கள் தோன்றினார்கள். ;

குடிசைக்கு முன்னால் இன்னொரு பக்கமாக ஒரு வேப்ப மரத்தடியில் உட்காருவதற்கு வசதியான சதுரக் கல் ஒன்றிருந்தது. மோகினியிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமலும் அவளையும் உடன் வருமாறு கூப்பிடாமலும் வேகமாக நடந்துபோய் அந்தக் கல்லில் உட்கார்ந்து கொண்டாள் முத்தழகம்மாள். அம்மா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போன வேகத்திலிருந்தே அவளுடைய கோபம் சிறிதுகூடத் தணியவில்லை என்பதை மோகினி புரிந்துகொள்ள முடிந்தது. கண்ணாயிரமும் டிரைவரும் ஜாக்கி கொடுத்துப் பஞ்சரான டயரைக் கழட்டி "ஸ்டெப்னி மாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கீழே இறங்கி நின்ற இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்த மோகினியை நோக்கி, "நீங்களும் போய் உட்காருங்கம்மா.. ஸ்டெப்னி மாட்டியானதும் கூப்பிடறேன்' என்று கார் டிரைவர் கூறினார். அம்மாவுக்கும் கண்ணாயிரத்துக்கும் இல்லாத கருணை காரோட்டும் ஊழியனான அந்த ஏழையிடம் இருந்தது. அந்தச் சின்னஞ்சிறு கருணையைக்கூடக் கண்ணாயிரத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/336&oldid=595512" இலிருந்து மீள்விக்கப்பட்டது