பக்கம்:பொன் விலங்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33

பூபதியின் இந்த வேண்டுகோளைச் சத்தியமூர்த்தி ஆவலோடு வரவேற்று ஒப்புக்கொண்டான். இந்த வேண்டுகோளை அவர் விடுத்திராத பட்சத்தில்தான் அவன் வருந்த நேரிட்டிருக்கும். ஆங்கில நூல்களையும், ஆங்கிலத்தையும் பற்றித் தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழைப் பற்றியோ தன்னிடம் அவர் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால்தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான். குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து அழகிய பாடல் ஒன்றைக்கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி, 'யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? - செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே 'முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒரு மலைச்சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள். அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்றுகொண்டே இருக்கவேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அவளோ இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பிரிந்து போய் விடுவேன்' என்ற முகக் குறிப்புடனும் காரிய அவசரத்துடனும் அவள் முன் நின்று கொண்டிருக்கிறான். அவன் பிரியப் போகிறான் என்பதை உணர்ந்ததும் அவள் தன் முகத்தில் மனத்தின் துயரம் தெரிய வாடி நிற்கிறாள். அந்த வாட்டத்தைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்கிறான்.

"எதற்காக இப்படி மனம் கலங்குகிறாய் பெண்ணே? உன்னைப் பெற்றவள் யாரோ? என்னைப் பெற்றவள் யாரோ? அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கக் கூட மாட்டார்கள், என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்திலேனும் நண்பர்களுமில்லை, நீயும் நானும் இன்று இப்போது இங்கே சந்தித்துக் கொண்ட விநாடிக்கு முன்பாக என்றும் எப்போதும் எங்கும் நம்முள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து

பொ. வி - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/35&oldid=595542" இலிருந்து மீள்விக்கப்பட்டது