பக்கம்:பொன் விலங்கு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 351

நினைவுகள்கூட இப்போது அறவே வற்றிப் போயிருந்தன. எல்லாரையும் போல அவளும் ஒரு மாணவி என்பதைத் தவிர வேறெந்த எண்ணமும் அவனுக்கு இப்போது இல்லை. ஆனால் அவளோ பார்த்த முதல் விநாடியிலிருந்து அவனிடம் எத்தனை தவிப்பும் ஆர்வமும் கொண்டிருந்தாளோ அத்தனை தவிப்புடனும், ஆர்வத்துடனுமே இன்னும் அவனைத் தேடி வந்து கொண்டிருந்தாள். அவ்வளவு விரைவாக அவன் அப்போது தன் பேச்சை முடித்துக் கொண்டு மாடிக்குப் போனதுகூட அவன் தன்னைப் புறக்கணித்து விட்டுப் போவதாகத்தான் அவளுக்குத் தோன்றியிருக்கும். எப்படித் தோன்றியிருந்தாலும் சத்தியமூர்த்தி அதைப்பற்றிக் கவலைப் படவில்லை. மேலே மாடிக்கு வந்து அறைக் கதவைத் திறந்துவிட்டு ஏதோ பழைய புத்தகம் ஒன்றைத் தேடி எடுப்பதற்காகப் பெட்டியைக் குடையத் தொடங்கியிருந்த அவனுடைய கையில் அதன் ஒரு மூலையில் கிடந்த பாரதியின் கடிதங்கள் இரண்டும் அகப்பட்டன. அவற்றைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கணம் ஏதோ நினைத்துத் தயங்கியவன் அடுத்தகணம் மனம் மாறியவனாக அவற்றின் துணுக்குகள் அடையாளமே தெரியாதனவாய் மிகமிகச் சிறியவையாகி விடும்படி விரல்களின் பிடியில் மேலே கிழிக்கவும் முடியாமல் தடுமாறுகிற அளவு மாற்றி மாற்றிக் கிழித்தான். பெட்டியின் மற்றொரு மூலையில் மோகினியின் பென்ஸில் எழுத்துக் கடிதமும் கிடப்பது தெரிந்தது. ஒரு விநாடி அதையும் கிழித்தால் என்ன? என்று நினைத்து அடுத்த விநாடி அப்படிச் செய்ய விடாமல் ஏதோ ஒரு ஞாபகம் இடைப்பட்டுத் தடுத்ததனால் அந்த ஒரே ஒரு கடிதத்தை மட்டும் தனது பெட்டியில் வைத்தான். .

பாரதியின் கடிதங்களைக் கிழித்த துணுக்குகளை அப்படியே அருகில் குவித்துவிட்டுப் புத்தகத்தைத் தேடும் வேலையைத் தொடர்ந்தபோது அறை வாசலில் நிழல் தட்டியது. திரும்பினால் மறுபடியும் அந்தப் பெண் பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் 'பிளவர்ஸ் கார்னரில் வாங்கிய அலங்காரப் பூக்கள் நிறைந்திருந்தன."இந்த அறையில் நடுவாக ஒரு வட்டமேஜையைப் போட்டுப் பொன்நிறக் கண்ணாடி கூஜா ஒன்றையும் வைத்து நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/353&oldid=595550" இலிருந்து மீள்விக்கப்பட்டது