பக்கம்:பொன் விலங்கு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 355

உலகத்தைப் பார்க்கும் பார்வையுமாக வாழ்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி நூல் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து சத்தியமூர்த்தி அவரை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அவர் எத்தனை பெரிய கோழை என்பதை சத்தியமூர்த்தி அந்தச் சம்பவத்திலிருந்து முடிவு செய்திருந்தான். அன்று நடந்தது இதுதான்.

பகல் இரண்டரை அல்லது மூன்று மணி இருக்கும். ஒரு வகுப்புமில்லாத ஓய்வு வேளையாகத் தனக்கு அந்த நேரம் வாய்த்திருந்த காரணத்தினால் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நூல்நிலையத்தில் போய் ஷேக்ஸ்பியருக்கு பிராட்லி எழுதிய விமர்சனப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டிருந் தான். புத்தகத்தில் ஈடுபட்டு ஆழ்ந்தபின் அவன் சுற்றுப்புறத்தைப் பற்றியே மறந்துபோயிருந்தான். அப்போது கல்லூரி முதல்வர் ஏதோ காரியமாக அங்கு வந்திருக்கிறார். அவர் அங்கு வந்ததும் சத்தியமூர்த்திக்குத் தெரியாது; திரும்பிப் போனதும் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. அரை மணி நேரத்துக்குப் பின்பு கல்லூரி ஊழியன் ஒரு சிறிய காகிதத்தை மடித்துக்கொண்டு வந்து அவனிடம் நீட்டிய போதுதான் என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். 'கல்லூரி முதல்வர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் என்ற மரியாதையைக்கூட இன்னும் இங்கே சில ஆசிரியர்கள் கற்றுக்கொள்ளவில்லை. பாவம் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் - என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முதல்வர் ஏதோ எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். சத்தியமூர்த்திக்கு அதைப் படித்ததும் ஒன்றுமே புரியவில்லை. இதற்கு என்ன அர்த்தம்?' என்று அதைக் கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜிடம் காண்பித்துக் கேட்டான் சத்தியமூர்த்தி. ஜார்ஜ் அதைப் படித்துவிட்டுச் சிரித்துக்கொண்டே சொன்னார்:

'மனிதர் அரைமணி நேரத்திற்கு முன்னால் இங்கே வந்து போனார். என்ன காரியமாக வந்தாரோ? நீங்கள் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லையே என்ற கோபத்தில் வந்த காரியத்தைக் கூட மறந்து போய்விட்டார் போலிருக்கிறது. சுற்றிச் சுற்றி வந்தார். நீங்கள் எழுந்து நிற்கிற வழியாக இல்லை. உங்கள் மேல் குற்றம் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரேயடியாகப் புத்தகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/357&oldid=595558" இலிருந்து மீள்விக்கப்பட்டது