பக்கம்:பொன் விலங்கு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 357

உங்களையேதான் எடுத்துக் கொள்ளுங்களேன்! நீங்கள் சொல்லி வேண்டிக்கொண்டதனாலோ எதிர்பார்த்துத் தவிப்பதனாலோ மாணவர்கள் உங்களை மதிக்கிறார்கள் என்று கூறிவிட முடியுமா? அவர்களுக்காகவே உங்களை மதிக்க வேண்டும் என்று தோன்று கிறது; மதிக்கிறார்கள். மழையைப்போல் தானாகவே குளிரக் குளிரப் பெய்ய வேண்டும். அதுதான் சார் என்றும் நிலைக்கிற மரியாதை"இப்படி லைப்ரேரியன் ஜார்ஜ் ஆவேசமாகப் பேசியபோது தன்னைப்பற்றியும் தன்னை மாணவர்கள் மதிப்பதைப் பற்றியும் அவர் இவ்வளவு நுணுக்கமாகக் கவனித்து வைத்திருப் பதைக் கண்டு சத்தியமூர்த்தியே ஆச்சரியப்பட்டுப் போனான். தன்னைப் பற்றி லைப்ரேரியன் ஜார்ஜ் கூறியவற்றைக் கேட்கும்போது அவனுக்குச்சிறிது கூச்சமாகக்கூட இருந்தது. தன்னைப் பற்றிய இந்த மரியாதையை இப்படித் தன்னிடமே வாய்விட்டுக் கூறாமல் ஜார்ஜ் தம் மனத்துக்குள்ளேயே வைத்துக் காப்பாற்றியிருந்தாரானால், இன்னும் நாகரிகமாக இருந்திருக்குமே என்று நினைத்தான் சத்தியமூர்த்தி. -

சொல்லாக வெளிவந்து விடுகிற புகழ்ச்சியைவிட ஒருவருடைய மனத்தில் நிலைத்த மதிப்பீடாகத் தங்கிச் சொல்லாக வெளிப்படாத புகழ்ச்சி மிகவும் தரமானது என்று எண்ணுகிற சுபாவம் சத்தியமூர்த்திக்கு உண்டு. மாணவர் யூனியன் தேர்தலை நடத்துகிற பொறுப்பைக்கல்லூரி நிர்வாகியின் கட்டளைக்காகத்தன்னிடம் விட்டு விட்டு விலகி நிற்கிற முதல்வரைப் பற்றிச் சிந்தித்தபோது இந்தச் சம்பவம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. நோட்டிஸ் போர்டில் தேர்தலைப் பற்றிய அறிவிப்பை ஒட்டிய அன்று பிற்பகல் வேளையிலிருந்தே வகுப்பறைகளிலும் கல்லூரி மைதானத்திலும் மாணவர் யூனியன் தேர்தலுக்குரிய கலகலப்பும் பரபரப்பும் வந்துவிட்டன. பத்துப் பன்னிரண்டு மாணவர்களாகச் சேர்ந்து கும்பல் கும்பலாக நின்று பேசுவதும், மாணவர்களைக் கூட்டம் கூட்ட முயல்வதுமாகக் கட்சித்தன்மையோடு கூடிய ஒரு சுறுசுறுப்பு, கல்லூரி எல்லையெல்லாம் வந்து நிரம்பிவிட்டது.

பிற்பகல் மூன்று மணிக்கு அந்தக் கல்லூரி மாணவர்களிலேயே முரடன் என்று மற்ற ஆசிரியர்கள் கருதிப் பயந்த புலி கோவிந்தன் என்ற மாணவன் யூனியன் தலைவர் தேர்தலுக்குச் சத்தியமூர்த்தியிடம் மனுச் செய்தான். அவனுடைய மனுவை வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/359&oldid=595562" இலிருந்து மீள்விக்கப்பட்டது