பக்கம்:பொன் விலங்கு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 - பொன் விலங்கு

"மிஸ் மகேசுவரி தங்கரத்தினம் உங்களுக்குப் பாரதியைத் தேர்தலுக்கு நிற்கச் செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நீங்களே அவளிடம் வற்புறுத்தி நிற்கச் சொல்வதுதான் முறை. நான் சொல்வதை அவள் மறுக்க மாட்டாள் என்று நீங்கள் என்னைத் தேடி வந்து சொல்வதே எனக்குப் பிடிக்கவில்லை. யூனியன் தலைவர் பதவிக்குத் தகுதியுள்ள மாணவ மாணவிகளில் யார் அபேட்சை மனுவைக் கொண்டு வந்து கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியது என்னுடைய பொறுப்பு. அபேட்சை மனுவைக் கொடுக்கச் சொல்லி யாரையும் தேடிப் போய் வற்புறுத்துவது என்னுடைய வேலை இல்லை! தயவு செய்து இனிமேல் என்னிடம் வந்து யாரையும் எதற்காகவும் தூண்டச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்."

'அதற்கில்லை சார் நாங்கள் வேண்டுவதைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். பாரதி நீங்கள் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள் என்பதால்தான் சொன்னேன். உங்கள் மேல் அந்தப் பெண் அத்தனை 'ரிகார்ட் வைத்திருக்கிறாள் என்பதால்தான் உங்களைத் தேடிக் கொண்டு இதைச் சொல்ல வந்தோம். இதில் ஏதாவது பிழை இருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள்' என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போய்விட்டாள் மகேசுவரி தங்கரத்தினம்.

தன்னையும் பாரதியையும் இப்படிச் சேர்த்து நினைக்கும் படியான மனநிலை எவருக்கும் எதனாலும் உண்டாகாத விதத்தில் இனி அளவோடுதான் பழகவேண்டும் என்று தன் மனத்தில் வைராக்கியமாக ஒரு தீர்மானம் செய்து கொண்டான் அவன். தன் தோழிகளிடம் பேசும் போதும், மற்றவர்களிடம் புதிய தமிழ் விரிவுரையாளரைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளும்போதும் பாரதி காண்பித்திருக்கிற அளவற்ற ஆர்வத்தினால்தான் இப்படித் தன்னையும் அவளையும் சேர்த்து நினைக்கிறார்கள் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயத்தில் இப்படி வம்பு பேசுகிறவர்களுக்காகவும் பொய்யர்களுக்காகவும், அயோக்கியர்களுக்காகவும் எந்தத் தவறும் செய்யாத தான் எதற்காகப் பயப்படவேண்டுமென்று ஆத்திரமாகவும் கோபமாகவும் கூட இருந்தது அவனுக்கு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/362&oldid=595570" இலிருந்து மீள்விக்கப்பட்டது