பக்கம்:பொன் விலங்கு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி &63

ஒரு கூட்டத்தில் புலி கோவிந்தன், "ரோஜாப் பூவைக் காட்டிப் பூவையர்கள் உங்களை மயக்க முயல்கிறார்கள். மயங்காதீர்கள் ஆண் சிங்கங்களே நம்முடைய ஸ்கூட்டரின் சக்கரங்களுக்கு கீழே ரோஜாப் பூ நசுங்கப் போவது உறுதி உறுதி!! உறுதி!' என்று கடுமையாகப் பேசினானாம். அப்படி அநாகரிகமாகப் பேசியதற்காக அவன்மேல் விசாரணை நடத்தவேண்டும் என்று தேர்தல் அதிகாரியான சத்தியமூர்த்தியிடம் வந்து பாரதியின் சார்பில் புகார் செய்தாள் மகேசுவரி தங்கரத்தினம். அவள் தன்னுடைய புகாரைச் சொல்லிவிட்டுப்போன கால் நாழிகைக்கெல்லாம் புலி'யின் சார்பில் ஒரு முரட்டு மீசைக்கார மாணவன் ஓடிவந்து, "உங்களை எல்லாம் ஏறி மிதித்துச் சவாரி செய்ய நினைக்கிறார்கள் என்பதற்கு அவர்களுடைய ஸ்கூட்டர் சின்னமே சரியான அடையாளமாக இருக்கிறது மாணவர்களே ஆகவே, ஸ்கூட்டரை நம்பாதீர்கள். அது உங்களை ஏறி மிதித்துச் சவாரி செய்து அதன் மூலம் தாங்கள் முன்னுக்குப் போய்விட விரும்புகிற சுயநலமிகளின் சின்னம் என்பதை மறவாதீர்கள்-என்று அந்த யாழ்ப்பாணத்துப் பொண்ணு பேசறா சார் இதை நீங்க கண்டிக்கணும்" என்று ரிப்போர்ட்செய்தான். தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் இருதரப்பாரும் நாகரிகமாகப் பேச வேண்டும்' என்று பொதுவாக மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்தான் சத்தியமூர்த்தி.

இந்த மாதிரித் தேர்தல் வேளைகளில் கல்லூரிகள் உணர்ச்சி வெள்ளமாயிருப்பதை யாரும் தடுக்க முடியாது. வயதானவர்கள் நடத்துகிற தேர்தல்களிலேயே சிறுபிள்ளைத்தனம் நிறைந்திருக்கும் போது, சிறுபிள்ளைகளாகவே நடத்துகிற தேர்தல் வம்பில்லாமல் எப்படியிருக்க முடியும்?' என்று நினைத்து மன அமைதி பெற்றான் அவன். தன்னுடைய கல்லூரி நாட்களில் அவனும் இப்படித் தேர்தல்களை அநுபவித்திருந்தான். இவைகளில் நிரம்பியிருக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், ஆர்வங்களும்தான் சுவையான அம்சங்கள். அவற்றை முயன்று தடுக்கவும் முடியாது; தடுப்பதும் கூடாது' என்பது அவன் எண்ணமாயிருந்தது. தேர்தலுக்காக மறுநாள் பிற்பகல் கல்லூரி வகுப்புகள் நடைபெறவில்லை. கல்லூரி நூல் நிலையம் போலிங் பூத் ஆக மாறியிருந்தது. லைப்ரேரியன் ஜார்ஜ், சத்தியமூர்த்திக்குத் தேர்தல் உதவியாளராகியிருந்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/365&oldid=595576" இலிருந்து மீள்விக்கப்பட்டது