பக்கம்:பொன் விலங்கு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பொன் விலங்கு

என்று ஒரு பெண் தான் மனப்பூர்வமாக நேசிக்கத் தேர்ந்தெடுத்த ஒருவனிடம் அந்த நம்பிக்கையும் அந்தரங்கமும் இல்லையென்று தெரிந்து மனம் உடைந்தபின் தெரிகிற சோர்வும் அலட்சியமும் இப்போது பாரதியிடம் ஏற்பட்டிருப்பதாக அவனுக்குப் புரிந்தது. செல்வக் குடும்பத்துப் பெண்களின் இத்தனை பணிவாகவும், நாணமாகவும் ஆண்களுக்கு முன் நடந்து கொள்கிறவர்கள்கூட இருக்கிறார்களா? என்று பாரதியைச்சந்தித்த முதல் சந்திப்பின்போது அவன் வியந்திருக்கிறான். அதே பாரதிதான் அவனிடம் அபேட்சை மனுவைக் கொடுக்க வந்த தினத்தன்று முற்றிலும் மாறிப் போயிருந்தாள். அவள் மாற வேண்டுமென்றுதான் அவனே ஆசைப்பட்டான். ஆனால் அந்த மாறுதல் இப்படி ஓர் அலட்சியமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. -

முன்பு இன்டர்வியூ முடிந்ததும் தன்னை பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆர்வத்தோடு கல்லூரிக் கட்டிடங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்த பாரதியையும், அன்று பஸ் நிலையத்தில் மழை பெய்திருந்த செம்மண் பூமியைப் பார்த்து, "இன்டர்வ்யூவின்போது நீங்கள் கூறிய பாடலில் வந்த உவமையின் அழகு இப்போதுதான் நன்றாகப் புரிகிறது சார்' என்று கூறிய பாரதியையும் இப்போது நினைவு கூர முயன்றான் சத்தியமூர்த்தி. அவள் எந்தவிதமான அன்பை அவனிடம் எதிர்பார்த்தாளோ அது அவனிடம் இல்லையென்று புரிந்ததும் பணிவு, விநயம் எல்லாம்கூட அவளிடமிருந்து இன்று உடனடியாக மாறிப் போய்விட்டாற் போலிருந்தது. அவள் மதுரையில் தனக்குக் கிடைக்கும்படி எழுதியிருந்த கடிதங்களைத் தான் படித்தபோது, 'உலகத்தில் இப்படியும் ஓர் அன்பு உண்டா!' என்றெண்ணி வியந்ததையும் இப்போது நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கடிதங்களை அவனே கிழித்திருந்ததைப் பார்த்துத்தான் அவள் மனம் மாறியிருக்கிறாள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்துப் பணிகிற பணிவும் நாணமும் நிலையானவை அல்ல என்றுதான் இப்போது அவன் எண்ண வேண்டியிருந்தது. சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாக இருக்கிறாள். அப்படிப்பட்ட வேளைகளில் அவள் அதிசயமாக இருக்கிறாள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதையுமே அவளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/368&oldid=595582" இலிருந்து மீள்விக்கப்பட்டது