பக்கம்:பொன் விலங்கு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 367

'உங்களைப் பாராதபோது பார்க்கத் தவித்திருக்கிறேன்; பார்த்தபோது பிரியத் தவித்திருக்கிறேன் என்று நவநீத கவியின் கவிதையைச் சொல்லி ஒருநாள் தன்னிடம் அழுத அதே பாரதி அபேட்சை மனுவைக் கொடுக்க வந்த தினத்தன்று அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போனதை நினைத்துப் பார்த்து அவள்தான் அப்படிச் செய்தாள் என்பதை நம்ப முடியாமல் மனம் குழம்பினான் சத்தியமூர்த்தி-'ஆயிரம் நினைவுகள் அலைந்திட ஒற்றை மனம் படைத்தாய்' என்று நவநீத கவி பாடினாரே, அது பெண்களுக்குத்தான் மிகமிகப் பொருத்தம் என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. அவளுடைய மாறுதலால் தான் எதையும் இழப்பதாக அவனுக்குத் தோன்றாவிட்டாலும், அவள் ஏன் இப்படி மாறினாள்?' என்று மட்டும் சிந்திக்கத் தோன்றியது. அப்படிச் சிந்தித்ததில் மோகினியின் அன்பைப் போல ஆட்படுகிற அன்பைச் செய்வதற்குப் பாரதி பொறுமையற்றவள் என்றும் பாரதியால் செய்ய முடிந்த அன்பு ஆள விரும்புகிற அன்பே என்றும் அவனால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஜார்ஜ் தாம் எண்ண வேண்டிய வாக்குச் சீட்டுகளை எண்ணி முடித்து அந்த எண்ணிக்கையையும் ஒரு துண்டுத்தாளில் குறித்து தயாராக வைத்துவிட்டார். சத்தியமூர்த்தி இரண்டு மூன்று முறை எண்ணும்போதே எண்ணிக்கையை மறந்துபோய்ச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதன் காரணமாக மீண்டும் மீண்டும் அவற்றை எண்ண வேண்டியிருந்தது. சந்தேகமாக இருந்ததனால் சத்தியமூர்த்தி தான் எண்ணிய வாக்குச் சீட்டுகளையும் ஒருமுறை ஜார்ஜிடம் கொடுத்து அவரை எண்ணச் செய்தபின் மொத்தம் கூட்டிப் பார்த்ததில் நானுறு வோட்டுகள் அதிகமாகப் பெற்றுப் பாரதியே வெற்றி யடைந்திருப்பதாகத் தெரிந்தது.

'இப்போது நம்முடைய நிலை மிகவும் தர்ம சங்கடமானது சார் ‘புலி கோவிந்தனும் அவனுடைய ஆட்களும் வெளியே ஆவலோடு காத்திருக்கிறார்கள். பாரதிக்கு வெற்றி என்று வாயில் பக்கம் போய் அறிவித்தோமானால் நீங்களும் நானும் ஏதோ சூழ்ச்சி செய்து கல்லூரி நிர்வாகியின் மகளாகிய பாரதியை வெற்றி பெற வைத்து விட்டோம் என்று தோல்வி ஏமாற்றத்தில் வாய் கூசாமல் சொல்லுவார்கள். பேசாமல் மாணவர்கள் எல்லாரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு நாளைக் காலையில் நோட்டீஸ் போர்டில்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/369&oldid=595584" இலிருந்து மீள்விக்கப்பட்டது