பக்கம்:பொன் விலங்கு.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 பொன் விலங்கு

அடிமைகளின் கூட்டத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வீரன் ஒருவன் அரச வம்சத்துப் பெண்ணைக் காதலிப்பதைப் பற்றியும் வருகிற கதை. பிரமாதமாக எடுத்திருக்கிறானாம். ஆங்கில வரலாற்றுப் படங்களிலேயே இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லையாம். ஒன்றரை நாள் இரயிலிலும் பஸ்ஸிலுமாகப் பயணம் செய்து வந்த அலுப்பு இருந்தாலும் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்க்காமல் தவற விட்டு விட்டேனானால் அப்படித் தவற விட்டுவிட்டேன் என்ற ஏக்கத்தினாலேயே நாளைக்கு இதைவிட அதிக அலுப்பாக இருக்கும் எனக்கு' என்று பக்குவமடையாத சிறுபிள்ளை மனத்தோடு வற்புறுத்தினார் சுந்தரேசன். சத்தியமூர்த்திக்கு முரண்டு பிடித்துப் பழக்கமில்லை. பிறரைத் தனக்காக அளவு கடந்து வற்புறுத்துவதும் சத்தியமூர்த்திக்குப் பிடிக்காது. பிறர் தன்னிடம் வேண்டுகோளோடு நிற்கும்போது வேண்டுகோளுடன் போய் நிற்பதே அருமையாகவும் வாய்க்கும்படி பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன். இப்போது சுந்தரேசன் வற்புறுத்தித் திரைப்படத்துக்கு அழைத்த வேளையிலும் அவன் அப்படியே நடந்துகொள்ள நேர்ந்தது. 'உங்கள் விருப்பத்தைத்தான் கெடுப்பானேன்? போகலாம், வாருங்கள்" என்று அவரோடு திரைப்படத்துக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி.

மல்லிகைப் பந்தல் நகரில் இருந்த இரண்டு மூன்று முக்கியமான திரைப்படக் கொட்டகைகளும் அந்த லேக் சர்க்கில் பகுதியிலே இருந்தன. அங்குள்ள தியேட்டர்களில் சிறந்ததும் வழக்கமாக ஆங்கிலப் படங்கள் மட்டுமே நடைபெறக் கூடியதுமாகிய புளுஹில் பாரடைஸில் நுழைந்தனர் இருவரும். சுந்தரேசனுடன் இடையிடையே பேசிக்கொண்டே பல வண்ணப் படமாகவும் பல்சுவைக் காவியமாகவும் எடுக்கப்பட்டிருந்த அந்தத் திரை ஒவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதும்கூடத் தந்தையின் கடிதமும் அந்தக் கடிதத்தில் நிரம்பியிருந்த வீட்டுக் கஷ்டங்களைப் பற்றிய சிந்தனைகளும் தாயின் உடல் நலக் குறைவுமே சத்தியமூர்த்தியின் மனத்தில் அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தன. இரும்பு இதயம் படைத்த பிரபுக்களின் கொடுங்கோன்மையில் சிக்கிக் கண்களும் உடம்பும் இரத்தமும் சிந்திடத் தவிக்கும் அடிமைகளின் அவல வாழ்க்கையைத் திரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/376&oldid=595600" இலிருந்து மீள்விக்கப்பட்டது