பக்கம்:பொன் விலங்கு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 381

செய்கிற உத்தியோகத் தொழுவிலிருந்து விடுபட்டு ஓடி வருகிறவர்களைப் பலர் எதிர்கொள்ளத் தயங்குவதுதான் சமூக வழக்கம். நீயானால் ஏதோ பெரிய தளையிலிருந்து விடுபட்டு வந்து நிற்கிறவனைப் போல் சிரிக்கிறாய். சந்தோஷப்படுகிறாய்."

"ஆமாம்! இதற்காகச் சந்தோஷப்படுவதில் இதைவிடப் பரிபூரணமான எல்லை ஒன்று இருக்க முடியுமானால், அந்த எல்லைவரை துணிந்து சென்று சந்தோஷப்படுவதற்குக்கூட நான் இப்போது தயாராக இருக்கிறேன். நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்துவிட்டு நம்மை அடக்கி ஒடுக்கி ஆள விரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிற போதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்து விட்டதாகத்தான் உணர்கிறேன். 'குத்துவிளக்கில் இருந்து கொண்டே என்னுடைய நியாயங்களுக் காகவும், தன்மான உணர்வுகளுக்காகவும் நான் போராடினால் என்ன? என்று நீ என்னிடம் கேட்க நினைக்கலாம், நான் என்னுடைய எதிரிகளாகக் கருதத் தகுந்தவர்களோடு மட்டும்தான் எதிர்த்துப் போராடலாம். எதிரிகளாகக் கருதவும் கூடத் தகுதியில்லாத வர்களோடு நான் எப்படிப் போராட முடியும்? போராடுவதற்குக்கூட நம்முடைய எதிரிகள் நம்மளவுக்குப் பக்குவமானவர்களாக இருக்க வேண்டாமா? அங்கே அதுவும் இல்லை. கண்ணாயிரம் என்னிடம் நேரில் பேசுவதற்குப் பயப்படுகிறான். பின்புறமாக நான் இல்லாதபோது ஜமீன்தாரிடம் சிண்டு முடிகிறான். ஜமீன்தாரோ, “பொம்மை போடுகிறவருக்கு இவ்வளவு சம்பளமா?' என்று கேட்கிற அளவுக்கு மூடனாயிருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் நான் செய்கிற தொழிலின் சுயமரியாதை இருக்கிறதே. அதைக் காத்துக் கொள்ளவாவது நான் அங்கிருந்து வெளியேறியாக வேண்டும்."

'உண்மைதான் சுயமரியாதையும் பெருமையும் காத்துக் கொள்வதுதான் ஆண்பிள்ளைக்குக் கற்பு. என்ற பொருளில் ஒரு திருக்குறள் கூட உண்டு. 'பெண்களுக்குக் கற்பைப்போல் ஆண்களுக்குக் கற்பு அவர்களுடைய பெருமைதான் என்ற அந்தக் குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார். 'ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத் தான் கொண்டு)ஒழுகின் உண்டு' என்ற குறள் கேள்விப்பட்டிருக்கிறாயா குமரப்பன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/383&oldid=595617" இலிருந்து மீள்விக்கப்பட்டது