பக்கம்:பொன் விலங்கு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 பொன் விலங்கு

கடுமையான குரலில் சொல்லி அவளை உட்கார வைத்தான் சத்தியமூர்த்தி. தன்னுடைய சொற்பொழிவில் கட்டுண்டு கிடந்த பெரிய வகுப்பினிடையே அவள் அமைதியைக் கலைப்பதுபோல் முன் வரிசையில் ஒரு பெண் எழுந்து நின்று அடம் பிடித்ததை அவன் அவ்வளவாக விரும்பவில்லை.

"தீமையும் நன்மையும் நம் கண் காணப் பிறர் செய்வதனாலேயே நமக்கு வருவதை உலகியலில் ஒவ்வொரு நாளும் காண்கிறோம். அதைப் போலவே நம்முடைய வருத்தத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான செய்கைகளையும் பிறர் நமக்குச் செய்வதையும் காண்கிறோம். அப்படி இருக்கும்போது இந்தப் பழைய பாடலில் கூறப்பட்டிருக்கிற தத்துவம் எவ்வாறு பொருந்தும் என்று உங்களில் சிலருக்குச் சந்தேகம் உண்டாகலாம். "மாடர்ன் சென்ஸிபிலிட்டி என்று சொல்கிறார்களே அந்தப் புதிய அறிவுணர்ச்சி...எவ்வளவுக்கு நவீனமானதோ அவ்வளவுக்குப் பலக் குறைவானதாகவும் சில இடங்களில் இருக்கும். உதாரணமாக இந்தப் பாடலில் நான் சொல்லிய விதமான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டு அந்தச் சந்தேகம் ஏற்படுவதற்குக் காரணமாக உங்களுடைய மாடர்ன் சென்ஸிபிலிட்டி'தான் தூண்டுதலாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுவது பிழை. இந்தப் பாடல் எந்த நிலையில் எத்தகைய சான்றோரால் எதற்காகக் கூறப்பட்டதென்று சிந்தித்தால் இப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு எழப்போவதில்லை. மனிதர்களுக்கு மனிதர்கள் பகையின்றி வாழவும், கருணையும் அன்பும் நிறைந்த உலகைக் காணவும், பொருள்மொழிக் காஞ்சியாக அறிவுரை கூறுகிற சான்றோர் ஒருவர் இதைப் பாடியிருக்கிறார். விருப்பும் வெறுப்புமில்லாமல் வாழப் பழகிக் கொண்ட பெருந்தன்மையாளர் ஒருவர் துன்பமும் இன்பமும் பிறர்தருவதனால் வருவதாக எண்ணித் துன்பம் செய்கிறவர்களை வெறுக்கவும் இன்பம் செய்கிறவர்களை விரும்பவும் பழகிக் கொள்ளலாகாது என்று சமநிலையோடு அறிவுரை சொல்கிறாரென்றால், அந்த ஒற்றை மனத்தின் பண்பாட்டு உயர்வை மட்டுமாவது நாம் போற்ற வேண்டாமா? நீதி நூல் கருத்துகளிலும், அறநூல் கருத்துகளிலும் அதிகமாகச் சந்தேகம் கேட்கிறவர்கள் இந்த அடிப்படையை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.'அறம் செய்வது நல்லது என்றால் இன்று நம் கண்காணப் பலர் அறம் செய்யாமலே நன்றாக இருக்கிறார்களே? என்று சந்தேகம் கேட்டுவிடத்தான்'மாடர்ன்சென்ஸிபிலிட்டி என்று நினைப்பது தவறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/386&oldid=595622" இலிருந்து மீள்விக்கப்பட்டது