பக்கம்:பொன் விலங்கு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 பொன் விலங்கு

போலிருந்தான் அவன். இரண்டு கைகளாலும் துடுப்புக்களை வலித்துக் கொண்டிருந்த குமரப்பனோ இருந்தாற் போலிருந்து தன் வலதுகையைத் துடுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு சத்தியமூர்த்தியின் கரத்தைப் பிடித்திழுத்து அந்த நீலக்கல் மோதிரத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் குறும்பு நகை புரிந்தான். பின்பு அதே குறும்புச் சிரிப்போடு சத்தியமூர்த்தியை நோக்கிச் சொன்னான்: "இதை உன் கரத்தில் அணிவித்தவள் இப்போது உன் கையையும் நினைவையும் ஒன்றாக அழகுபடுத்திக் கொண்டிருக்கிறாள். நான் எண்ணுவது சரிதானே?"

சத்தியமூர்த்தி மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தான். 'மனிதனுடைய வாழ்க்கையில் நேரிடும் அழகிய இரகசியங்களெல்லாம் அன்பு காரணமாகவே நேரிடுகின்றன என்று சொல்லுவார்களடா சத்தியம்! நெருங்கிய நண்பனுக்குக் கூடத் தெரியாமல் உன் வாழ்க்கையில் அத்தகைய இரகசியங்கள் நேர்ந்திருக்கின்றன. முன்பொரு நாள் சித்திரைப் பொருட்காட்சியில் மோகினியின் நடனத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வையையாற்று மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நீ அவள்மேல் அதிக அநுதாபத்தோடு பேசியதையும் குத்துவிளக்கின் சார்பில் மோகினியைப் பேட்டி காணச் சென்று திரும்பிய பின் நான் அவள் புகைப்படங்களில் சிலவற்றை இணைத்து உனக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு நீ அதிக ஆர்வத்தோடு நன்றி தெரிவித்துப் பதில் எழுதியிருந்ததையும் இப்போது நினைத்தால் எனக்கு எல்லாமே புரிகிறதடா சத்தியம்'

"புரிகிறதல்லவா! புரிந்தபின் நீ என்னைப்பற்றி என்னதான் நினைக்கிறாய் என்பதைச் சொல்லேன்' என்று அதுவரை பேசாமலிருந்த சத்தியமூர்த்தி நண்பனைக் கேட்டான்.

"அதெப்படி? நீதான் எனக்குச் சொல்வதற்கு நிறைய மீதம் வைத்திருக்கிறாய் இரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது மோகினியைத் தடுத்துக் காப்பாற்றியதைப் பற்றி அன்று வையை ஆற்று மணலில் பேசிக் கொண்டிருந்தபோது தெரிவித்தாய் அன்று உரையாடிக் கொண்டிருந்தபோது நாம் இருவருமே அவளுக்காக மிகவும் அநுதாபப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பின்னால் உங்களுக்குள் எவ்வளவோ நடந்திருக்கிறாற் போலிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/392&oldid=595632" இலிருந்து மீள்விக்கப்பட்டது