பக்கம்:பொன் விலங்கு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 393

விட்டு நண்பர்கள் கரையேறினர். அறைக்குப் போய்த் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனையும் அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்குப் போகலாம் என்று அவர்கள் புறப்பட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாகச் சுந்தரேசனே அறையைப் பூட்டிக்கொண்டு எதிரே வந்து சேர்ந்துவிட்டார். மூவரும் சேர்ந்தே போய் உணவு விடுதியில் இரவு உணவை முடித்துக்கொண்டு திரும்பினார்கள்.

மல்லிகைப் பந்தலுக்குக் குமரப்பன் வந்து சேர்ந்தபின்பு ஒவ்வொரு நாளும் கல்லூரிப் பாடவேளைக்கு அப்பாலும் சத்தியமூர்த்தியின் நேரம் உற்காகமாகக் கழிந்து கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நண்பர்கள் மூவரும் மல்லிகைப் பந்தலுக்குப் பக்கத்தில் இருந்த மயிலாடும் பாறை தேயிலை எஸ்டேட்டையும் அருவியையும் பார்க்கப் போயிருந்தார்கள். இன்னொரு ஞாயிற்றுக் கிழமை ஆரஞ்சுப் பழம், வால்பேரிக்காய், திராட்சைக் கொடி போன்ற கனி வகைகள் விளையும் பெரிய பழத் தோட்டம் ஒன்றிற்கு உல்லாசப் பயணம் போய் வந்தார்கள். மல்லிகைப் பந்தல் மலைப் பகுதியில் அங்கும் இங்குமாக இருந்த அழகிய இடங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கும் வாய்ப்பு ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் அவர்களுக்குக் கிடைத்தது. அடுத்த மாதம் முதல் தேதி பிறந்ததும் ஒன்றுமே விளக்கமாகச் சொல்லாமல், "இந்தா, இதை வைத்துக் கொள்' என்று குமரப்பன் பதினாறு ரூபாய்க்கான நோட்டுக்களை எண்ணிச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினான். சத்தியமூர்த்திக்கு நண்பனின் செய்கை ஒன்றும் புரியவில்லை. - -

"எதற்காக இந்த ரூபாயை என்னிடம் கொடுக்கிறாய் குமரப்பன்? நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா?" என்று நண்பனைக் கோபித்துக் கொண்டான் அவன். நண்பனோ தன் செய்கையில் பிடிவாதமாக இருந்தான்.

"சொன்னால் கேள் சத்தியம் மயிர் ஊடாடா நட்பில் பொருள் ஊடாடக் கெடும்' என்று பழமொழியே இருக்கிறது. இந்த பதினாறு ரூபாயை அறை வாடகையின் மொத்தத்தில் என் பங்காக எடுத்துக் கொள். என் கையில் இருக்கிற வரை நானும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். நட்பு வேறு, பொருட்செலவு வேறு..."

"நீயும் நானும் அப்படி எதிலும் வேறு வேறாகப் பழக வில்லையே குமரப்பன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/395&oldid=595635" இலிருந்து மீள்விக்கப்பட்டது