பக்கம்:பொன் விலங்கு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பொன் விலங்கு

'ஒர்க் காம்ப்பிற்கு இணங்கியாக வேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறைக்காக அப்பாவோடு மைசூர் தசராவுக்குப் போகப்போவதாக ஆசிரியர்களிடமும், சக மாணவிகளிடமும் பெருமையடித்துக் கொண்டிருந்த பாரதியே அந்த ஒர்க் காம்ப்பிற்கு இணங்கித் தானாகக் கையொப்பமிட்டிருந்தது சத்தியமூர்த்திக்குப் பெரிதும் ஆச்சரியத்தை அளித்தது. சமூக சேவை முகாமுக்காகக் கூடாரங்கள், சமையல், சாப்பாடு ஏற்பாடுகள் எல்லாம் மாணவர்களே செய்தார்கள். மலைமேல் சில ஆயிரம் அடி உயரத்துக்கு இருந்த அந்தச் சிற்றுரில் சந்தன மரங்கள் ஏராளமாக இருந்தன. அந்த ஊரின் குளிரில் அட்டைக்கடியையும் பொறுத்துக்கொண்டு ஒரு வாரம் கடுமையாகப் பாடுபட்டு மலைச் சரிவை அகற்றிச் சாலையைப் பழையபடி ஆக்குவதற்காக மாணவமாணவிகள் மிகவும் கடுமையாக உழைத்தார்கள். சத்தியமூர்த்திக்குத் துணையாக ஆயிரம் அலுப்புச்சலிப்போடு அந்த மலையாளத்து அவியல் பேராசிரியரும் வந்திருந்தார். மாணவிகளை மேற்பார்க்க ஒரு பேராசிரியையும் வந்திருந்தார். பயனை எதிர்பாராமல் யாரோ நடக்க யாரோ வழி உண்டாக்கித்தருகிற அந்தப் பணியில் எவ்வளவு மனநிறைவு இருக்க முடியும் என்பதை அந்தச் சமூகசேவை முகாம் முடிந்து, மாணவ மாணவிகளைத்திரும்ப அழைத்துக்கொண்டுமல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய தினத்தன்று சத்தியமூர்த்தி உணர்ந்தான். எந்த இடத்தோடு அந்தச் சாலையை அவர்கள் செப்பனிட்டு முடித்தார்களோ அந்த இடத்தில் ஓர் அடையாளமாகச் சாலைமேல் ஏதாவது மரம் நடவேண்டும் என்று மாணவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அந்த மரத்தைச் சத்திய மூர்த்தியே தன் கையால் நட வேண்டுமென்றும் மாணவர்கள் விரும்பினர்.

சத்தியமூர்த்தி அங்கே சந்தனமரத்தின் சிறு செடி ஒன்றை நட்டான். அருகில் நின்று கொண்டிருந்த பாரதி உற்சாகமாகப் பூவாளியைத் துக்கிக்கொண்டு வந்து அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள். "மிஸ் பாரதியே தன் கையால் நீர் வார்த்த பிறகு இந்த மரத்தின் யோகத்துக்குக் கேட்கவா வேண்டும்?" என்று சத்தியமூர்த்தி அப்போது இருந்த கலகலப்பான நிலையில் வேடிக்கையாகச் சொல்லியதைக்கூட அவள் இரசிக்கவில்லை போலிருந்தது. எல்லோரும் அதைக்கேட்டுச் சிரித்தார்கள். அவளோ தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த பூவாளியையும் கீழே போட்டுவிட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டாள். அப்போது மறுபடியும் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/406&oldid=595648" இலிருந்து மீள்விக்கப்பட்டது