பக்கம்:பொன் விலங்கு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 407

மோகினியின் மென்மையான இதயத்தைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். கார் விபத்தினாலும் தாயின் மரணத்தினாலும் அவள் எவ்வளவிற்கு அதிர்ச்சியடைந்து வாடியிருப்பாள்-என்று கற்பனை செய்து பார்த்துத் தன் மனத்திற்குள் அவன் வருந்தினான்.

சத்தியமூர்த்தியும் குமரப்பனும் சேர்ந்து செய்கிற பயணத்தில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல் அவசரத்துடனும், மெளனமாகவும் செய்த முதற் பயணமாக இருந்தது இன்றைய பயணம். இருவரும் மதுரையை அடைந்து ஆஸ்பத்திரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, “கார் விபத்தில் மோகினிக்கு அதிகக் காயங்கள் ஏற்பட்டிருக்குமோ குமரப்பன்?" என்று பரபரப்பாக ஒரு கேள்வியை இருந்தாற்போலிருந்து கேட்டான்சத்தியமூர்த்தி."அப்படியெல்லாம் நினைத்து வீணாகக் கலவரமடையாதே சத்தியம்! சில்லரைக் காயங்களோடு உயிர் தப்பினார் என்றுதான் பத்திரிகைகளில் போட்டிருக்கிறது. இன்னும், கால் மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய் நேரிலேயே பார்த்துவிடப் போகிறோம், மனத்தை அலட்டிக் கொள்ளாமல் வா" என்று நண்பனைத் தேற்றி அழைத்துக்கொண்டு சென்றான் குமரப்பன். எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் இருவரும் டவுன் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது வையைப் பாலம் நெருங்கும் வேளையிலே சத்தியமூர்த்தியின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. ஒடுகால் பள்ளங்களும், மணல் மேடுகளும் மறைந்து, வையையில் செந்நிறப்புதுநீர் அபூர்வமாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. பாலத்தின் மேற்குப் புறம், கட்டை வண்டிகளும், மற்றப் போக்குவரவு வாகனங்களும் செல்கிற கல் பாலத்துக்கும் அப்பால் தளர்ந்த கல் தூண்களோடு எதற்கோ கட்டுப்பட்டு நிற்கும் பழைய உண்மையாய் மைய மண்டபம் நின்று கொண்டிருந்தது. அதற்கும் மேற்கே இரயில் பாலத்தில்-பாலத்தின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் சரியாயிருக்கிறாற்போல் ஒரு கூட்ஸ் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்தப் பாலத்தில் இரயில் வந்து கொண்டிருந்த அதிகாலை நேரமொன்றின் போதுதான் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கிருந்த மோகினியை அவன் காப்பாற்றினான். அப்படி அவன் காப்பாற்றியதைப் பற்றிப் பின்னால் ஒரு சமயம் அவளே கூறியிருந்த அழகிய வாக்கியமும் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. எத்தனை அழகிய வாக்கியம் அது..? - " . . . . . . . ‘. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/409&oldid=595651" இலிருந்து மீள்விக்கப்பட்டது