பக்கம்:பொன் விலங்கு.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 429

கோச்சடைக்குப் போகிற வழியில் வையைக் கரையோரம் உள்ள ஜமீன் மாளிகையில் ஜமீன்தார் தனியாகத்தான் இருப்பார். போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வந்து விடலாம். இனிமேல் நீ அந்த நாட்டியக் காரியைத் தேடிக்கொண்டு போகாதே...அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்...ஜமீன்தார் கோபத்துக்கு ஆளாகக் கூடாது.கண்ணாயிரமும் ஜமீன்தாரும் நினைத்தால் யாருக்கு என்ன கெடுதல் வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்தக் குத்துவிளக்குப் பத்திரிகையை ஜமீன்தார் விலைக்கு வாங்கறதுக்கு முன்னாலே ஒரு சமயம் இப்ப ஆஸ்பத்திரியிலே படுத்துக்கிட்டிருக்காளே, இந்த நாட்டியக்காரப் பெண்ணைப் பேட்டி கண்டு வருவதற்காக கண்ணாயிரம் குமரப்பனையும் இன்னொரு உதவியாசிரியரையும் அழைச்சிட்டுப் போயிருந்தாராம். அப்படி போயிருந்தப்போ கண்ணாயிரத்தையும் வைச்சிக்கிட்டே அவரையும் ஜமீன்தாரையும் பற்றி இந்தக் குமரப்பன் ஏதோ குத்தலாகப் பேசினானாம். அந்தப் பகையை மனத்திலே வைத்திருந்து 'குத்துவிளக்கை விலைக்கு வாங்கினதும் முதல் வேலையா அவனோட வேலைக்குச் சீட்டுக் கிழிச்சிருக்காங்க..." என்று தந்தை கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி இறுதியாக அவர் சொல்லிய செய்தியால் பொறுமையிழந்தான்.

"ஜமீன்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நீங்கள் சொல்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியாதோ அப்படியே குமரப்பனைப்பற்றி நீங்கள் சொல்கிற பொய்யையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை அப்பா குமரப்பன் உண்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய பணம் பதவி உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களைத் துச்சமாக நினைக்கிறவன். அவனுடைய பார்வையிலும் நினைப்பிலும் கண்ணாயிரமும் ஜமீன்தாரும் வெறும் நாய்கள்...'காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறி' என்பதுபோல குமரப்பனே குத்துவிளக்கு வேலையைத் தனக்கு வேண்டாமென்று விட்டிருக்கிறான். ஜமீன்தாரும் கண்ணாயிரமும் அந்த உண்மையைத் திரித்துக் கூறிக் கொண்டிருக் கிறார்கள். நீங்களும் அதை அப்படியே நம்புவதைப் பார்த்துத்தான் பரிதாபமாயிருக்கிறது..." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/431&oldid=595676" இலிருந்து மீள்விக்கப்பட்டது