பக்கம்:பொன் விலங்கு.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பொன் விலங்கு

பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய அழகு ஒளிரும் சிவந்த முகம் இந்தச் சில நாட்களாகக் கவலையால் வாடியிருக்கிறதடா சத்தியம். உன்னுடைய தாமரைப் பூப்போன்ற பாதங்கள் தூசி படிந்து பொலிவின்றித் தோன்றுகின்றன. உன் கண்களில் இடைவிடாத சிந்தனை தேங்கியிருக்கிறது. உலகத்துக்காகக் கவலைப்படும்போது ஒளி நிறைந்து தோன்றும் அதே மேதைகளின் முகம் தங்கள் சொந்தக் கவலைகளின்போது தானே வாடி விடுகிற விந்தையை நினைத்தேன். உன்னுடைய படிப்பினாலோ, சிந்தனைகளினாலோ, நவீன இலட்சியங்களினாலோ நிச்சயமாக நீ ஓர் இளம் மேதை என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை இன்றுவரை நான் உன்னிடம் கூடச் சொல்லாமல் என் இதயத்தில் பரம இரகசியமாகவே ஒப்புக்கொண்டு பொதிந்து வைத்திருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் எனக்கு உன்னைப் பார்த்துப் பரிதாபமாயிருக்கிறது. நீயே உனக்கு ஒரு விலங்கைப் பூட்டிக்கொண்டு அழகுபார்க்க முயல்கிறாயோ என்று கூடப் பயமாயிருக்கிறது. உனக்காக நான் கவலைப்படுகிறேன். சமூகப் பிரச்சினைகளின்மேல் அன்பும், அநுதாபமும் கொண்டு கொதித்துக் குமுறிப் பேசிக் கொண்டிருந்த பழைய சத்தியத்தின் முகத்தை நினைத்துவிட்டு இப்போது உன்னைப் பார்த்தால் உன் முகத்தில் ஏதோ ஒன்று குறைகிறதடா சத்தியம் உண்மையான அன்பு -அதாவது காதல்கூடப்-பல சமயங்களில் மனிதன் தனக்குப் பூட்டிக் கொள்ளும் விலை மதிப்பற்ற விலங்காகத்தான் இருக்கிறது.

'உண்மையான அன்புதான் 'கயஸை லைலாவுக்காகப் பைத்தியம் பிடித்து அலைய வைத்தது. தேவதாலைப் பாரு'வுக்காக இரத்தம் கக்கிச் சாக வைத்தது. அம்பிகாபதியைக் கழுவேற்றியது. இராமனை இலங்கைவரை படையெடுத்துச் சென்று அலைய வைத்தது. சீதையைத் தூக்கிச் சென்றது போல் குடிசையைப் பெயர்த்துத் தூக்கிக் கொண்டு போகிறவர்கள்தான் இராமாயணக் காலத்தில் இராவணர்கள். ஆனால் இந்தக் காலத்திலோ உன்னுடைய மனத்திலிருந்து மோகினியைப் பிரித்தெடுத்துக்கொண்டு போக முயல்கிற மஞ்சள்பட்டி ஜமீன்தாரைப் போன்ற நாகரிக இராவணர்கள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள். உன்னையும், மோகினியையும் நீங்கள் இருவரும் அன்பு செலுத்துவதையும் நான் மிக அதிகமாக மதிக்கிறேன் சத்தியம் ஆனால் உனக்கு முன்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/438&oldid=595683" இலிருந்து மீள்விக்கப்பட்டது