பக்கம்:பொன் விலங்கு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 437

வந்து நிற்கும் பிரச்சினைகளையும், எதிர்ப்புகளையும் பார்க்கும்போது என் உயிர் நண்பனாகிய நீ இன்னும் முகத்தில் ஒளியிழந்து, கண்களில் சிந்தனை தேங்கிக் கால்கள் நடை சோர்ந்து வாழ்க்கை வீதியில் அலைய நேரிடுமே என்றுதான் பரிதாபமாக இருக்கிறது."

குமரப்பன் மேலே பேசுவதற்குள் இரயில் வந்து நின்று விட்டதற்கானபரபரப்பும், ஒலிபெருக்கி அறிவிப்பும் கேட்டன. அவன் விரைந்து நடந்தான். சத்தியமூர்த்தியும் பின் தொடர்ந்தான். இரயிலில் இடம் பிடித்து ஏறிக்கொண்டான் குமரப்பன் இரயில் புறப்படுமுன், "உன்னுடைய நம்பிக்கைகள் நலியச்செய்வதற்காக இவ்வளவு நேரம் நான் பேசவில்லை. நீ நான் கூறியவற்றையெல்லாம் நிதானமாகச் சிந்தனை செய்ய வேண்டும்" என்று குமரப்பன் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போனான். நண்பன் இரயிலில் புறப்பட்டுப் போய்விட்டாலும் அவன் உண்டாக்கி விட்டுப்போன சிந்தனை கனக்கும் மனத்தோடு சத்தியமூர்த்தி இரயில் நிலையத்துக்கு வெளியே வந்தான். மணி ஏழரைக்கு மேலாகியிருந்தது. பூபதியைப் பார்ப்பதற்காக அவன் செல்ல வேண்டியிருந்த பங்களாவோ இரயில் நிலையத்து மேற்பாலத்தைக் கடந்த அரசரடிக்கும் அப்பால் கோச்சடைப் பகுதியில் இருந்தது. நடந்து சென்றால் உரிய நேரத்தில் போக முடியாது என்று தோன்றவே ஒரு சைக்கிள் ரிக்ஷாவை வாடகைக்குப் பேசிக்கொண்டு புறப்பட்டான் சத்தியமூர்த்தி. அரை மணி நேரப் பயணத்துக்குப் பின் மாபெரும் தோட்டத்தோடு கூடிய அந்தச்சலவைக்கல் மாளிகை வாசலில் போய் இறங்கியபோது இந்த இடத்தில் வந்து இறங்குவதற்கே சைக்கிள் ரிக்ஷாவைப் போன்ற ஒரு சாதாரண வாகனம் தகுதியற்றது போல் தோன்றியது. ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுக் கீழிறங்கியபோது வெறும் ரிக்ஷாவில் வந்து கேட்டுக்கு வெளியே இறங்குகிற பஞ்சைகளைப் பற்றி எனக்கென்ன கவலை? என்று அலட்சியமாயிருப்பது போல் நின்ற கூர்க்காவைக் கவனித்தான் சத்தியமூர்த்தி-கூர்க்காவின் கவனத்தைத் தன்பக்கப் திருப்பிவிசாரித்து முடிக்கவே மிகவும் சிரமப்பட்டான் அவன். கூர்க்காசத்தியமூர்த்தியை உள்ளே அழைத்துக்கொண்டு போய் மாளிகையின் முன்புறம் 'ரிஸப்ஷன் என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/439&oldid=595684" இலிருந்து மீள்விக்கப்பட்டது