பக்கம்:பொன் விலங்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பொன் விலங்கு

"கல்வி வெறும் மலரைப் போன்றது. விநயமும் பணிவும்தான் அதை மணக்கச்செய்கின்றன. இதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது மிஸ்டர் சத்தியமூர்த்தி'

'தவறான முடிவுகளையும் பொய்யான சித்தாந்தங்களையும் மறக்கத் துணியாமல் வாயை மூடிக்கொண்டு ஊமையாக இருந்து விடுவதுதான் விநயமென்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்?' என்று கேட்டுவிடுவதற்குச் சொற்கள் நாவின் நுனியில் துடித்துக் கொண்டிருந்தும், பூபதி அவர்களின் மனம் எதனாலோ பொறுமையிழந்து போயிருப்பதைப் புரிந்துகொண்டு சத்தியமூர்த்தி அப்போது அவரிடம் ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். ஏதேதோ பேசியபடியே அவனை உணவுக் கூடத்துக்கு அழைத்துப் போயிருந்தார் பூபதி.

உள்ளே நடந்து செல்லச் செல்ல இடமும் அறைகளும் கூடங்களும் முடிவற்று வளர்ந்து கொண்டேயிருப்பதுபோல் பிரமை தட்டுமளவுக்குப் பெரிதாயிருந்தது அந்த வீடு. உணவுக்கூடத்துச் சுவர்களில் கொத்துக் கொத்தாகப் பழங்களையும் மலர்களையும் வரைந்த மேலை நாட்டு வண்ண ஒவியங்கள் வரிசை வரிசையாக மாட்டப் பெற்றிருந்தன. மென்மையான இளநீல வண்ணம் பூசப்பெற்று சுவர்கள் கண்ணாடிபோல் சுத்தமாகவும் பளீரென்றும் இருந்தன. நடுவாக வெளேரென்று தூய விரிப்புடன் நீண்டு கிடந்த சாப்பாட்டு மேஜையில் அலங்காரமான கண்ணாடிக்குடுவைகளில் மலர்க்கொத்துக்கள் சொருகப்பெற்றிருந்தன. ஆனால், மொத்தத்தில் அத்தனை அழகும் அத்தனை ஆடம்பரமும் அவ்ற்றுக்குச் சிறிதும் பொருத்தமில்லாததோர் மாபெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தன. அவ்வளவு பெரிய உணவுக்கூடத்தில் ஓர் ஒரமாகத் தரையில் மூன்றே மூன்று மணைப் பலகைகளை இட்டு இலை போட்டிருந்ததைக் காண என்னவோ போலிருந்தது. சத்தியமூர்த்தியும் பூபதியும் மணையில் உட்கார்ந்து கொண்டார்கள். சமையற்காரரோடு சேர்ந்து அந்தப் பெண்ணும் பரிமாறினாள்! "நீ எதற்காகச் சிரமப்படுகிறாய், அம்மா? நீயும் உட்கார்ந்து கொள்ளேன்' என்றார் பூபதி, அவள் அதைக் கேட்கவில்லை. உற்சாக மிகுதி சிறிதும் குறையாமல் வண்டுபோல் பறந்து பரிமாறினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/44&oldid=595685" இலிருந்து மீள்விக்கப்பட்டது