பக்கம்:பொன் விலங்கு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 445

கொண்டிருந்தது. தமக்கு வேண்டியவர் என்பதற்காக ஜமீன்தாரிடம் இல்லாத தகுதிகளுக்காவும் சேர்த்து அவரைப் பூபதி புகழ்ந்தது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. "மிஸ்டர் சத்தியமூர்த்தி நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய காரியம் ஒருபுறம் இருக்கட்டும். என் நண்பர் என்ற முறையில் நீங்கள் ஜமீன்தாரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படாவிட்டாலும் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் எனக்கு அடுத்தபடி மிகவும் முக்கியமானவர் என்பதற்காகவாவது அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் ஜமீன்தார் சமீபத்தில் ஒரு பெரிய வாரப் பத்திரிகையை விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்த ஊரிலிருந்து வெளிவருகிற 'குத்துவிளக்கு வாரப் பத்திரிகையை நீங்கள் பார்த்திருப்பீர்களே?..."

சத்தியமூர்த்தி இப்போதும் பூபதிக்குப் பதில் ஒன்றும் கூறாமல் புன்னகை புரிந்தான். தனக்கு விருப்பமில்லாத விஷயமானாலும் அந்த விஷயத்தை எடுத்துச் சொல்கிறவருடைய விருப்பத்தைப் புண்படுத்தாமல் புன்னகை புரிந்த படியே கேட்டுக் கொண்டு மெளனமாயிருந்துவிடும் பழக்கத்தை மேற்கொள்வது அவனுக்கு இன்று மட்டும் புதுமையில்லை. சிறிதுநேரம் ஜமீன்தாருடைய புகழ்மாலை வளர்ந்த பின் கண்ணாயிரம் என்கிற பிரமுகரின் சாமர்த்தியங்களைப் பற்றியும் யாரோ முன்பின் தெரியாதவனுக்கு எடுத்துச் சொல்வதுபோல் பூபதி அவனிடம் சொல்லத் தொடங்கினார்.

'கண்ணாயிரத்தை என்னவோ என்று நினைத்து விடாதீர்கள். அவர் பெரிய 'ஜீனியஸ்'. இந்த உலகத்தில் அவரால் முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது. முன்னால் 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜென்ஸிஸ் என்று ஒரு விளம்பரக் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருந்தார். இப்போது குத்துவிளக்கின்' ஜெனரல் மானேராக இருந்து நிர்வாகம் செய்யும் பொறுப்பையும் ஜமீன்தார் அவரிடமே விட்டிருக்கிறார். மக்களுக்குக் கவர்ச்சியான புதுப்புது அம்சங்களைப் புகுத்திக் குத்துவிளக்கை மிக வேகமாக மின்னச் செய்யப் போகிறார் கண்ணாயிரம்..."

“...எனக்குத் தெரியும்...' என்று சுருக்கமாகப் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. அவன் மனநிலையை உணர்ந்து கொண்டவர்போல் பேச்சைத் திடீரென்று வேறு திசைக்குத் திருப்பினார் பூபதி. r ; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/447&oldid=595693" இலிருந்து மீள்விக்கப்பட்டது