பக்கம்:பொன் விலங்கு.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 447

நலனுக்குரிய ஒரு விஷயமாக இருந்தது அது. சத்தியமூர்த்தி திகைத்துப் போனான். பல பெரிய மனிதர்கள் ஜெகில் அண்ட் ஹைடாக இருப்பதும் உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்வதும் அவனுக்குத் தெரியும். பூபதியைப்பற்றி அவன் அப்படி இதுவரை நினைக்கவில்லை. இன்றோ இந்த விநாடியிலிருந்தே அவரையும் அப்படி நினைக்கத் தொடங்குவதற்கு அவன் சிறிதும் தயங்கவில்லை. புகழுக்கும் பெருமைக்கும் சிறிதுகூட ஆசை இல்லாதவர்களைப் போலப் பேசிக்கொண்டே அவற்றுக்காகத் தவித்து மாய்கின்ற பணக்காரப் பிரமுகர்கள் பலரைப் போலத்தான் பூபதியும் இருக்கிறார் என்று அவன் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டான். தர்மத்தையும், பக்தியையும் பற்றி அடிக்கடி பேசுவதன் மூலமாக மட்டுமே தங்களையும் புற உலகுக்கு நல்லவர்களாகக் காண்பித்துக் கொண்டு-வாழ்கிற வாழ்க்கையில் தர்மமோ, பக்தியோ, ஒழுக்கமோ சிறிதுமில்லாத ஆஷாடபூதிப் பிரமுகர்களில் பூபதியும் ஒருவராக இருப்பதை சத்தியமூர்த்தி தெரிந்துகொள்ள நேர்ந்துவிட்டது. அவன் அப்போது அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே அருவருப்பும் கூச்சமும் அடைந்து எங்கோ பார்க்கலானான்.

ஆனால் பூபதியோ கூசாமல் அவன் முகத்தைப் பார்த்து மேலும் ஏதோசொல்வதற்குஇருந்தநிலையில் பாரதிதேநீர்க்கோப்பைகளோடு அங்கு வந்து விட்டாள். தேநீரைப் பருகிக்கொண்டே சத்தியமூர்த்தி நினைத்தான் "தாங்களே தங்களுடைய மனச்சாட்சிக்காக நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பதைவிடத்தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக்கொண்டாலே போதும் என்ற ஆசைதான் இன்று மிகப்பலரிடம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகப் பூபதியும் அந்தப் பலரில் ஒருவராகத்தான் இருக்கிறார் ஒழுக்கமும் பண்பாடும் இல்லாத ஜமீன்தாரை வேறு பல் சொந்தக் காரியங்களுக்காக பூபதி தாராளமாகப் புகழ்கிறார். அயோக்கியரான கண்ணாயிரத்தை 'ஜீனியஸாக வருணிக்கிறார். இவற்றையெல்லாம் செவிகளில் ஏற்றுப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நான் மனம் புழுங்குகிறேன். இந்த இடத்தில் இந்த மாளிகையில் இப்படி உட்கார்ந்திருந்த போது நான் எதற்கோ அடிமைப்பட்டிருப்பதைப் போல் என் இதயமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/449&oldid=595695" இலிருந்து மீள்விக்கப்பட்டது