பக்கம்:பொன் விலங்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 43

அந்தப் பெண். குளிர் பிரதேசமாகையினால் விழுதாக உறைந்து கிடந்த நெய் வெள்ளி ஸ்பூனிலிருந்து இலையில் விழாமல் போகவே அவள் ஓங்கி உதறியபோது நெய்யோடு ஸ்பூனும் சேர்ந்து சத்தியமூர்த்தியின் இலையில் விழுந்து வைத்தது.

'நன்றாக இருக்கிறதம்மா நீ பரிமாறுகிற அழகு! இவரை நெய்யை மட்டும் சாப்பிடச் சொல்கிறாயா? ஸ்பூனையும் சேர்த்து விழுங்கச் சொல்கிறாயா?" என்று சொல்லிச் சிரித்தார் பூபதி,

"மன்னியுங்கள்! நெய் இளகவில்லை' என்று சொல்லிவிட்டு வேறு ஸ்பூன் எடுத்து வருவதற்காக அவள் உள்ளே சென்றபோது நெய் இளகாததற்காக வருத்தப்படுகிறவளுடைய மனம் தனக்காக இளகியிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தரங்கமாக மகிழ்ந்தான் சத்தியமூர்த்தி. நெய் விழுது இலையில் விழுவதற்காக ஸ்பூனை ஓங்கியபோது, அப்படி ஓங்கிய கையில் கலீரென்று குலுங்கி ஓய்ந்த வளையல்களின் ஒலி இன்னும் அவன் செவிகளில் இனியதோர் பண்ணாக இசைத்துக்கொண்டிருந்தது. உடல்நலக் குறைவினால் பூபதி சரியாகச் சாப்பிடவேயில்லை. இலையில் உட்கார்ந்ததற்காக ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழித்தார். ஆனாலும் சத்தியமூர்த்தி சாப்பிட்டு முடிகிற வரையில் அவனோடு உடன் அமர்ந்திருந்தார் அவர்.

சாப்பாட்டுக்குப் பின்பும் பூபதி அவர்களோடு முன்பக்கத்து அறைக்குள் வந்து சிறிதுநேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. மலைப் பிரதேசமாகையால் திடீரென்று அந்த நடுப்பகல் வேளையிலும் மழை தூறத் தொடங்கியிருந்தது. நீலமும் கருமையும் கலந்து கண்களைக் கவர்ந்து மயக்கும் அந்த மலைச் சிகரங்களில் மேகம் குவியல் குவியலாகச் சரிந்து தொங்கும் காட்சியை அறையின் பலகணி வழியாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இனிமேல் தான் அந்த அழகிய ஊருக்கு வந்துவிடப் போகிறோம் என்ற நம்பிக்கையே அப்போது அவனுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி நீங்கள் கல்லூரிக்குப் போய் பிரின்ஸிபலைப் பார்த்து விடை பெற்றுக் கொண்டபின் ஊருக்குப் புறப்படலாம். பிரின்ஸிபல் உங்களுக்கு எல்லா விவரமும் சொல்வார்" என்று சொல்லிக்கொண்டே வந்த பூபதி சிறது தயங்கியபின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/45&oldid=595696" இலிருந்து மீள்விக்கப்பட்டது