பக்கம்:பொன் விலங்கு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 449

பெரிதாக எழுந்து ஒலிக்கும் வெடிச் சிரிப்புகளுமாக அந்தக் காம்பவுண்டி லிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் செவிகளில் கேட்டு அவனை அருவருப்படையச் செய்தன. அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து சேரும் வரை அவன் மனத்தில் பலவிதமான சிந்தனைகள் அலைமோதிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு வந்து இரவுச் சாப்பாட்டை முடித்த பின்பும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. அம்மா அவனிடம் எதையெதைப் பற்றியோ பேச முயன்றும் கேட்க முயன்றும் அவன் சரியாக மறுமொழி கூறாததனால் தானாகவே ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டுச் சிறிது நேரத்தில் தூங்கப் போய்விட்டாள்.

இரவு பதினொரு மணிக்கு மேல் தந்தை வீட்டுக்குத் திரும்பி வந்த போதும் சத்தியமூர்த்தி விழித்துக் கொண்டுதான் இருந்தான். திருத்தம் செய்து மதிப்பிடுவதற்காக மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்கள் சிலவற்றை மல்லிகைப் பந்தலிலிருந்து கையோடு எடுத்துக்கொண்டு வந்திருந்தான் அவன். அன்றிரவு தன்னால் முடிந்த நேரம் வரை கண் விழித்து அந்த விடைத்தாள்களில் பெரும் பகுதியைத் திருத்தி விடவேண்டும் என்று அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு அவன் வேலையைத் தொடங்கியிருந்த போதுதான், தந்தை வந்து கதவைத்தட்டினார். வீட்டில் அம்மா உள்பட எல்லாரும் தூங்கிப் போய்விட்டதனால் சத்தியமூர்த்தி, தான் திருத்தத் தொடங்கியிருந்த விடைத்தாள்களைக் கீழே வைத்துவிட்டு எழுந்து சென்று கதவைத் திறக்க வேண்டியதாயிற்று. அப்போது அவரும் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. அவனும் அவரிடம் ஒன்றும் பேசவில்லை; தந்தையின் மேல் கோபமும் பரிதாபமும் மாறி மாறி ஏற்பட்டன அவனுக்கு. திருமணமாக வேண்டிய தங்கைகளையும், இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு ஆகும் செலவுகளையும், தந்தையின் கவலைகளையும் நினைத்த போது அவனுக்குப் பரிதாபமாகவும் இருந்தது; அதே சமயத்தில் ஊர் உலகம் மெச்சவேண்டும் என்ற போலி கெளரவத்துக்காக ஜமீன்தாருக்கு ஏதோ டியூஷன் நடத்துவதாகப் பொய் சொல்லிவிட்டுத் தன் தந்தை அங்கே எடுபிடி வேலையாளாகச் சுற்றிக் கொண்டிருப்பதை நினைத்து அடக்க முடியாத சீற்றமும் எழுந்தது. அன்றிரவு அந்த வீட்டின் எல்லையில் தந்தையும் நிம்மதியாக உறங்க வில்லை; மகனும் நிம்மதியாக உறங்கவில்லை.

பொ. வி-29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/451&oldid=595698" இலிருந்து மீள்விக்கப்பட்டது