பக்கம்:பொன் விலங்கு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 455

மகனாகிய சகாரன் என்ற காமுகன் வஸந்தசேனையைத் துரத்துகிறான். சகாரனுடைய கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிப் பிழைப்பதற்காகச் சாருதத்தன் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்து தன்னுடைய விலைமதிப்பற்ற அணிகலன்களையும் பாதுகாப்பாக அங்கேயே ஒப்படைத்துவிட்டு மீள்கிறாள் வஸந்தசேனை.

'இதயத்தையே ஒப்படைத்துவிட்ட இடத்தில் அணிகலன்களை ஒப்படைப்பதா பெரிய காரியம்? என இந்த இடத்தில் மோகினி கதைகூறிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் நடுவே குறுக்கிட்டுப் பேசினாள். சத்தியமூர்த்தி அவளுடைய இந்த வாக்கியத்தில் எதையோ புரிந்துகொண்டவனைப்போல் ஒரு கணம் தான் சொல்லிக் கொண்டிருந்த கதையை நிறுத்திவிட்டு அவள் முகத்தை உற்றுப்பார்த்துப் புன்னகை பூத்தான். பின்பு கதையை மேலே வளர்த்துச் சொல்லிக் கொண்டே வருகையில் இருளிலும் மழையிலும் தவித்த வஸந்தசேனை சாருதத்தனைச் சந்திக்கப்போன இரவைப் பற்றியும், சாருதத்தனின் மகன் தெருவில் மண்வண்டி வைத்து விளையாடும் ஏழ்மையைப் பொறுக்க முடியாமல், வஸந்தசேனை தன்னுடைய பொன் நகைகளையும் கழற்றி அந்த மண்வண்டியில் வைத்து விளையாடுகிறானே' என்று பெருமைப்படும் சம்பவத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி மிகவும் உருக்கமாகக் கூறியபோது, மோகினி கண்கலங்கி விட்டாள். கதையை முழுவதும் சொல்லியபின், 'உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையேயிருந்துதான் வஸந்தசேனை, மாதவி, மணிமேகலை - கடைசியாக மோகினி எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள்' என்று சத்தியமூர்த்தி கூறிக்கொண்டே முடித்தபோது அந்தப் பட்டியலில் அவன் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டதற்காக மோகினி நாணித் தலை குனிந்தாள். கன்னம் சிவக்க அவள் இதழ்களில் நகை கனிந்தது. அந்த நகை மாறாத முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே எங்கோ பார்ப்பதுபோல் பராக்குப் பார்த்தபடி அவள் மெல்லச் சொன்னாள்:

'மணிமேகலையை விட்டுவிடுங்கள். அவள் துறவி. அவளைத் தவிர மற்ற இருவருக்கும் கிடைத்த காதலர்களைவிட என்னுடைய காதலர் எவ்வளவோ மேலானவர். சாருதத்தனும், கோவலனும் தங்கள் அன்புக்கு ஆட்பட்டவர்களைச் சாக முயல்வதிலிருந்து காப்பாற்றி வாழ வைக்கவில்லை. என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/457&oldid=595704" இலிருந்து மீள்விக்கப்பட்டது