பக்கம்:பொன் விலங்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 45

"நீயே கொண்டு போய் விட்டு விட்டு வருகிறாயா அம்மா?...'

-இந்த வார்த்தைகளைத் தந்தையிடமிருந்து எதிர்பார்த்தே அந்த விநாடிவரை தவித்து தவமிருந்தவளைப் போல, "அவசியம் செய்கிறேன் அப்பா" என்று பதில் சொல்லிக்கொண்டே ஷெட்டி லிருந்து காரை வெளியே எடுத்து வர விரைந்தாள் அவள்.

மிகஅதிகமாய் நெகிழும் இந்த அன்பை மறுத்துவிடநினைத்தும் அப்படி மறுக்க முடியாமல் வாளாவிருந்தான் சத்தியமூர்த்தி, பூபதி இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு விடைகொடுத்து அனுப்புகிற பாவனையில் அவனோடு முன் பக்கமாகச் சிறிது தொலைவு நடந்து உடன் வந்தார்.

'உங்களைப்போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிரின்ஸிபாலிடம் உங்கள் சர்டிபிகேட்டுகளின் ஒரிஜினல்களையெல்லாம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்குள் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்" என்று அவர் கூறியபோது அவரிடம் விடை பெற்றுப் புறப்படுவதற்கு அடையாளமாய் நிமிர்ந்து நின்று கை கூப்பினான் சத்தியமூர்த்தி. பதிலுக்கு அவரும் கை கூப்பிப் புன்முறுவல் பூத்தார்.

முன்னாலிருந்து அவனுக்காக இறங்கி வந்து காரின் பின்பக்கத்துக் கதவைத் திறந்து விட்டபின் மறுபடி முன்புறம் போய் ஏறிக்கொண்டாள் பாரதி. நான்கு பக்கமும் மஞ்சு படிந்து மழை மூடியிருந்ததால் சுற்றிலும் ஒன்றுமே தெரியவில்லை. மழைநீர் இறங்காமல் இருப்பதற்காகக் கார் கண்ணாடிகளையெல்லாம் மேலே தூக்கிவிட்டு அடைத்திருந்தது. உள்ளே கம்மென்று மல்லிகைப் பூமணம். அவள் கூந்தலில் சூடிக்கொண்டிருந்த மல்லிக்கைப் பூக்களின் நறுமணத்தை உணர்ந்து கிறங்கியபோது அந்த ஊருக்கு அப்படிப் பெயர் வைத்த புண்ணியவானை மனமார வாழ்த்தினான் சத்தியமூர்த்தி. கார் போய்க் கொண்டிருக்கும்போதே இடையிடையே, அவள் கைகளில் வளையல்கள் விளையாடிக் குலுங்கி ஒலித்தபோது தன் மனம் பேசத் தவிக்கும் வார்த்தைகளை வாய் பேச முடியாமல் போன குறையால் அந்த வளைகள் ஒலிப்பதையே ஒரு பேச்சாக்கி அவள் அவனிடம் நளினமொழியில் பேசுவதுபோல் இருந்தது. எதற்கோ பயப்படுவதுபோல் இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/47&oldid=595718" இலிருந்து மீள்விக்கப்பட்டது