பக்கம்:பொன் விலங்கு.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 பொன் விலங்கு

சத்தியமூர்த்தி மனம் கலங்கினான். மஞ்சள்பட்டி ஜமீன் பங்களாவுக்குள் அவன் நுழையும் போது பகல் மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. முன்புறத்துத் தோட்டத்தைக் கடந்து அவன் அந்த மாளிகைக்குள் நுழையும்போது அது சாவு வீடுபோல களையற்றிருந்தது. எடுப்பதற்கு ஆளில்லாமல் டெலிபோன் மணி கதறிக் கதறி ஓய்ந்த வண்ணமிருப்பதையும் சத்தியமூர்த்தி அங்கே கண்டான்.

சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் முன்புறத்துப் புல் வெளியில் எங்கோ இருந்த தோட்டக்காரன் ஓடிவந்து விவரம் சொன்னான்: “காலையில் அஞ்சு மணிக்கே ஏரோப்ளேன் கம்பெனிலேருந்து டெலிபோன்வந்திருச்சிங்க... ஜமீன்தார் ஐயா, கண்ணாயிரம் எசமான், மல்லிகைப் பந்தல் பெரிய ஐயாவோட மகள் எல்லாருமாகப் புறப்பட்டு உடனே போயிட்டாங்க... ப்ளேன்ல அவங்களும் அங்கே போவாங்க போலிருக்குதுங்க... ஏரோப்ளேன்ல விழுந்து போயிட்டாரே. அந்த ஐயாவோட மகள். அதுதான் இன்னிக்குக் காலையிலே மணியடிச்சதும் ஓடி வந்து டெலிபோனை எடுத்திச்சு. சமாசாரத்தைக் காதிலே கேட்டிச்சோ இல்லியோ அப்படியே டெலிபோனடியிலேயே மூர்ச்சையாகி விழுந்துட்டுதுங்க. ரொம்பக் கண்றாவி... அந்தப் பொண்ணைப் பார்க்க சகிக்கலே, நான் பெரிய திட மனசுக்காரனின்னு. பேரு. எனக்கே கண் கலங்கிப் போச்சுன்னாப் பார்த்துக்குங்களேன்..."

"இங்கே யாருமே இப்போது இல்லையா?" என்று சத்தியமூர்த்தி தோட்டக்காரனைக் கேட்டான்.

"டைப் அடிக்கிற அம்மா-அதாங்க அந்த சட்டைக்காரப் பொண்ணு-உடம்பு செளகரியமில்லேன்னு ரெண்டு நாளா வரவேயில்லை. புதிசா வந்திருக்கிற கணக்குப் பிள்ளைக் கிழவனாரும். ஜமீன்தாரோட இன்கம்டாக்ஸ் ஆடிட்டர் ஏதோ அவசரமா வரச் சொன்னாருன்னு சிட்டை, பேரேடு, வரவு செலவுப் புத்தகம் எல்லாத்தையும் கட்டி எடுத்துக்கிட்டுப் போனாரு அவரும் இன்னும் வரக்காணலை." -

"அது யாரு கணக்கப்பிள்ளைக் கிழவர்?" என்று தெரிந்தும் தெரியாமலும் பாதி சந்தேகத்துடனே தோட்டக்காரனைக் கேட்டான் சத்தியமூர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/478&oldid=595727" இலிருந்து மீள்விக்கப்பட்டது