பக்கம்:பொன் விலங்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பொன் விலங்கு

அப்படிப் பேசிக் கொள்ளாமலே போவதில் பொறுமை இழந்த சத்தியமூர்த்தி தானாகவே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

'உங்கள் ஊர் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எங்கள் மதுரைக்குப் பக்கத்தில் தெற்கே கப்பலூர் என்று ஒரு செம்மண் பிரதேசம் உண்டு. அந்த ஊர் மல்லிகைப் பூக்கள்தாம் உலகத்திலேயே வாசனை அதிகமான மல்லிகைப் பூக்கள் என்று நான் நேற்றுவரை பிடிவாதமாக நினைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான நீர்வளமும் இல்லாத அந்தச் செம்மண் காட்டை ஜாஸ்மின் ஃபீல்ட்ஸ் (மல்லிகைப் பண்ணை) என்று நான் என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். என்னுடைய பிடிவாதமான அபிப்ராயத்தை உங்களுர் மல்லிகைப் பூக்கள் இன்று மாற்றிவிட்டன."

'தனக்குத் தெரிந்ததை மட்டும் முதலாக வைத்தே ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதில் எவ்வளவு முரண்பாடு இருக்கிறது பார்த்தீர்களா' -என்று சொல்லிவிட்டுக் கைகளில் வளைகளும் இதழ்களில் நகைப்பும் கலீரெனச் சிரித்தாள் அவள்.

"வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் ஞாபகமாக இந்த அழகிய வாக்கியத்தை உங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள். பல விஷயங் களில் அவருடைய அபிப்பிராயங்கள் அவரால் சிந்திக்க முடிந்த எல்லையை மையமாக வைத்தே உருவாகியிருக்கின்றன. அந்த எல்லைக்கு மேல் உண்மை இருந்தாலும் அதைச் சிந்திக்க மறுக்கிறார் அவர்." - -

'மல்லிகைப் பந்தலுக்கு இந்தப் பூக்களின் மணத்தினால் இருக்கிற புகழைவிடத் தாம் நிறுவியிருக்கிற கல்லூரியின் பெருமையால் வருகிற புகழ் அதிகமாயிருக்க வேண்டுமென்பதே அவர் ஆசை." * -

"இருக்க வேண்டியதுதான்! ஆனால் ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது." . ". -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/48&oldid=595729" இலிருந்து மீள்விக்கப்பட்டது