பக்கம்:பொன் விலங்கு.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 479

மனத்தை நெகிழச் செய்து தவிக்க வைக்கும் அந்தச் சோகக் காட்சியைப் பார்த்தபின் அவனுடைய கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. பூபதியாவது விமான விபத்தில் ஒரேயடியாக இறந்து போய்விட்டார். இவளுக்கோ வாழ்க்கையே பெரிய விபத்தாக இருந்து ஒவ்வொரு நாளும் இவளை சிறிது சிறிதாகக் கொன்று கொண்டிருக்கிறது. விரும்பியபடி வாழ முடியாமல் போவதும், வாழ்வதில் விருப்பமில்லாதபடி ஏனோதானோ என்று இயங்குவதுகூட ஒருவகைச் சாவுதான். மனத்தைக் கொன்றுவிட்டு உடம்பால் மட்டும் வாழ முடியுமானால் அந்த வாழ்க்கையே அப்படி வாழ்கிறவர்களுக்கு ஒரு சாவாக இருக்கும்' என்று நினைத்தான் சத்தியமூர்த்தி.

'என்ன சார், அப்படிப் பார்க்கிறீங்க? இந்தப் பெண்ணை உங்களுக்கு தெரியுமா?' என்று சத்தியமூர்த்தியைக் கேட்டான் தோட்டக்காரன்,

'தெரியும் இந்தத் துர்ப்பாக்கியசாலியைத் தெரிந்த துர்ப்பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். சிறிது நேரத்திற்கு முன்னால் நீ கூறினாற்போல் கடவுளே கண்திறந்து இரக்கப்பட்டால்தான் இவளுக்கு விடிவு பிறக்கும்போல் இருக்கிறது. ஆனால் கடவுள் மிகப் பல நல்ல சமயங்களில் கொஞ்சமும் இரக்கமில்லாதவராயிருந்து விடுகிறார். சாதாரண மனிதர்களைப்போல் சில வேளைகளில் அவரும் நம்ப முடியாதவராகி விடுகிறார்" என்று கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் நாத் தழுதழுக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி, இதைக் கேட்டு விட்டுச் சிறிது நேரத்தில் தன் வேலையைக் கவனிப்பதற்காகத் தோட்டத்துப் பக்கமாகப் போய்விட்டான் அவன்.

அவர்களுடைய பேச்சுக் குரலினால் கவரப்பட்டுச் சோர்ந்தாற் போல் தளர்ந்து கண் மூடிக் கிடந்த மோகினி விழித்துக்கொண்டு விட்டாள். ஜன்னலுக்கு அப்பால் மோகினி சத்தியமூர்த்தியைப் பார்த்தாளோ இல்லையோ, அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. எழுந்து நின்று ஜன்னலின் கம்பிகளுக்கு நடுவே தெரிந்த அவனுடைய முகத்தை நன்றாகப் பார்த்தாள் அவள். புகை படிந்த ஒவியத்தைப்போல் அழுது அழுது ஒளி மங்கியிருந்த அவளுடைய சுந்தர முகத்தை அவனும் பார்த்தான். சோகமும் மெளனமுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/481&oldid=595731" இலிருந்து மீள்விக்கப்பட்டது