பக்கம்:பொன் விலங்கு.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 483

'அப்படிச் சொல்லாதே! நீயே ஒரு சிறப்புத்தான். நீ பேதையாயிருக்கிறாய் என்பது உனக்கு இன்னும் ஒரு சிறப்பு. பேதைகள் சுலபமாக மனத்தைப் பறி கொடுக்கிறார்கள். புத்தியும் தந்திரமும் உள்ளவர்களால் இன்னொருவருடைய மனத்தைப் பறித்துக் கொள்ள முடியுமே தவிர இன்னொருவருடைய மனத்துக்கு விட்டுக் கொடுக்க முடியாது." -

"நான் யாரிடம் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறேனோ அவர் என் மோதிரத்தைத் தான் அணிந்து கொண்டு தன் மோதிரத்தை எனக்கு அணிவித்துத் தெய்வீகமாகவும் அந்தரங்கமாகவும் என்னை மணந்து கொண்டிருக்கிறார். அப்படி மணந்து கொண்ட விநாடியிலிருந்து மனத்தினாலும் பாவனைகளினாலும் நான் அவருடைய மனைவியாகவே இருந்து வருகிறேன். உலகத்துக்குத் தெரிந்து வாழ முடிந்தாலும் உள்ளத்தினால் உணர்ந்து வாழ முடிந்தாலும் நான் அவருக்காகத்தான் வாழ்வேன் நீண்ட நாட்களுக்கு முன் ஒரு சமயம் கோவிலில் என்னைச் சந்தித்தபோது, 'வயிறு நிரம்ப வேண்டுமானால் யார் சொல்கிறபடியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும். கேட்கவும் ஒப்புக்கொள்ளவும் கசப்பாயிருந்தாலும் இதுதான் வாழ்க்கையைப் பற்றிய உண்மை’ என்று என்னிடம் கோபமாகச் சொல்லியிருக்கிறீர்கள் நீங்கள். வயிற்றை நிரப்பிக்கொண்டு எங்கேயாவது வாழ வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. உங்களைத் தவிர இன்னொருவர் இந்தக் கையைத் தொடுகிறபோது என்னுடைய உடம்பில் உயிர் இருக்காது. இது வெறும் வார்த்தையில்லை. உங்கள் ஆணையாகச் சத்தியம்..." என்று கூறி ஜன்னல் வழியே கையை நீட்டி அவனுடைய வலது கையைத் தன் கையோடு சேர்த்துக்கொண்டு அந்தச் சத்தியத்தை நிரந்தரமாக்குவதுபோல நிச்சயித்தாள் மோகினி. அப்போது சத்தியமூர்த்தி அவளைக் கேட்டான். -

“எப்படியும் நீ இந்த நரகத்தில் உன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு மோகினி ஆனால் உன்னை இப்படி இந்த அறையில் தள்ளி அடைத்துப் பூட்டிச் சிறை வைக்கிற அளவு நீ யாருக்கு என்னகொடுமை செய்தாய்? ஏன் இப்படிப் பாவங்களைக் கூசாமல் செய்கிறார்கள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/485&oldid=595735" இலிருந்து மீள்விக்கப்பட்டது